நாகர்கோவில்:
3500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடுவதற்கான மத்திய அரசின் திட்டத்தின் பரிந்துரைப்படி தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தின் அரசுப் பள்ளிகளை பாதுக்காக்க இந்திய மாணவர் சங்கம் சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. தமிழக அரசு கல்வியை இலவசமாக கொடுப்பதாக சொல்லி விட்டு அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு எந்த விதமான ஏற்பாடுகளையும் செய்யவில்லை. அரசு பள்ளிகளில் ஏராளமான பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக உள்ளன. பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை அரசு பள்ளிகளில் இல்லை. சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லாததால் தனியார்பள்ளிகளை நோக்கி பெற்றோர் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். அதன் விளைவாக தமிழகத்தில் 1500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. 3500 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடுவதற்கு மத்திய அரசின் பரிந்துரைப்படி தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கொடுப்பது அரசின் கடமை. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்ற காரணத்தை சொல்லி இந்திய நாடு முழுவதும் 2 லட்சத்து 60 ஆயிரம் பள்ளிகளை மத்திய அரசு மூடுவதற்கு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களின் கல்வியை தட்டி பறிக்கும் வேலையை செய்து கொண்டே, மறுபுறம் தனியாரை ஊக்குவிக்கக்கூடிய வேலையை செய்து கொண்டிருப்பதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த ஆண்டு மாணவர்களுக்கு முழுமையாக இலவச பேருந்து அடையாள அட்டையை வழங்கவில்லை. இதன்மூலம் மாணவர்களுக்கும், அரசு பேருந்து நடத்துநர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தக்கூடிய வேலையை திட்டமிட்டு தமிழக அரசு செய்து வருகிறது. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான 16 ஆயிரம் கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையை இதுவரை தமிழக அரசு வழங்கவில்லை. கல்வியாண்டின் துவக்கத்திலேயே மாணவர்களுக்கு மிதிவண்டி, பஸ் பாஸ், இலவச மடிகணினி ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் அரசு உண்டு உறைவிட பள்ளிகளுக்கு மிகவும் குறைவான தொகை வழங்கப்பட்டு வருகிறது. உடனடியாக தமிழக அரசு அந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும்.
அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் அண்ணாவின் இருமொழி கொள்கைக்கு எதிராக, ஆங்கிலம் அல்லது தமிழ் இந்த இரு மொழிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே படித்தால் போதும், தேர்வு எழுதினால் போதும் என்ற நிலையை உருவாக்க முயற்சித்து கொண்டிருக்கின்றனர். இது தமிழ் மொழியை திட்டமிட்டு அழிப்பதற்கான மிகப்பெரிய சதி. இருமொழிக் கல்வி என்பது தொடர வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியை உறுதி செய்ய வேண்டும்.
அதுபோல 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, மாணவர்கள் தோல்வியுறுவதை தவிர்க்க வழிவகைகள் கூறப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு திருத்தியுள்ளது. அந்த திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்த முயற்சிக்கிறது. 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பலமடங்கு கட்டணத்தை வசூலித்து கட்டண கொள்ளை நடத்தி வருகின்றன தனியார் பள்ளிகள். ஆனால் இதை கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு தனியார் பள்ளி முதலாளிகளை அண்டிப் பிழைக்கக்கூடிய மண்டியிட்டு மன்றாடக்கூடிய அரசாக இருந்து வருகிறது. தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், குமரி ஆகிய 4 முனைகளில் இருந்து 1500 கி.மீ சைக்கிள் பிரச்சார பயணத்தை மே 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இந்திய மாணவர் சங்கம் நடத்துகிறது. களியக்காவிளையில் இருந்து துவங்கி திருச்சி செல்லும் பிரச்சார பயணத்தை கேரள முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி துவக்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.இந்த சந்திப்பில், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பதில் சிங், மாவட்ட நிர்வாகிகள் பிரிஸ்கில், சச்சின், ராகுல் ஆகியோர் உடனிருந்தனர்.