tamilnadu

img

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அமெரிக்க தடையை இந்தியா ஏற்கக்கூடாது

நாகர்கோவில், மே 11- ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுக்கு ஆதாயம் என்பதால் அமெரிக்க தடையை இந்தியா ஏற்க கூடாது என ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் பார்வதிபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக் கூடாது என அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை கடுமையான பாதிப்பை உருவாக்கும். குறிப்பாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், சில மாதங்கள்கச்சா எண்ணெய் கடனுக்கு வழங்குகிறார்கள். இந்திய பணத்திலேயே கச்சா எண்ணெய் வாங்க முடியும். இந்திய அரசு ஈரானில் கட்டியுள்ள துறைமுகங்கள் என பல சாதகமான அம்சங்கள் உள்ளன. இந்த பின்னணியில் அமெரிக்க அரசு விதித்துள்ள தடையை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள கூடாது. தொடர்ந்து ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போதுஅந்த அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது, சில நிர்வாக முடிவுகளை எடுத்தது, அரசியல் சட்டத்துக்கு புறம்பானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பைஎதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.ஆனால் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைவிதிக்க முடியாது என கூறியுள்ளது. புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அரசு நிர்வாகத்தில் தலையிட்டது தவறு என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். 


குடிநீர் பற்றாக்குறை

தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. மாநில அரசு போர்க்கால அடிப்படையில் எல்லா மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளாட்சி தேர்தலைஅரசியலமைப்பு சட்ட அடிப்படையில் நடத்த வேண்டும். உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் உள்ளாட்சி மன்றங்கள் வழி செய்ய வேண்டிய மக்களின்அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 18 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக அதிகாரிகள் ஆவணங்கள் இருந்த அறையில் சென்று ஆவணங்களை நகல் எடுத்தது அதிகார வரம்பு மீறியசெயல் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிகாரி மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. மதுரைமாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவையிலிருந்து தேனிக்கு கொண்டுவரப்பட்ட வாக்கு இயந்திரம் சம்பந்தமாக ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன. மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முறையாக சரியாக நடைபெற வேண்டும். மாநில தலைமை தேர்தல் அதிகாரி சரியாக நடந்து கொள்ளாத காரணத்தால் வேறு ஒருவரை பார்வையாளராக நியமித்து அவர் தலைமையில் வாக்குஎண்ணிக்கை நடைபெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மத்தியில் ஆட்சி மாற்றம்வரும். மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏழு பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் காலதாமதப்படுத்தாமல் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 


தனியார் வன பாதுகாப்பு சட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டம்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் தங்கள்தேவைகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுபோல நிலம் வாங்கவோ, விற்கவோ மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற நிலையில் அனுமதி கேட்டு மனுக்களும் அலுவலகங்களில் கிடப்பில் உள்ளன. ஆகவே தனியார் வன பாதுகாப்பு சட்டத்தை குமரி மாவட்டத்தில் ரத்து செய்ய வேண்டும். மேலும் 4 வழி சாலைக்காக நீராதாரங்கள் மீது பாலம் அமைத்து சாலை போட வேண்டிய இடங்களில் குழாய்கள் பதித்து சாலை அமைக்கிறார்கள். நீராதாரங்கள் மீது பாலம் அமைக்க வேண்டிய இடங்களில் பாலம் அமைத்து சாலை போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு மத்திய மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரட்டை ரயில் பாதை பணி மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. ரயில்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ள நிலையில் இரட்டை ரயில் பாதை பணி தாமதமாவதால் ரயில்கள் தாமதமாக செல்வது, ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் செல்வதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என அவர் கூறினார். பேட்டியின்போது, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாநிலகுழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.வி.பெல்லார்மின் ஆகியோர் உடனிருந்தனர்.