நாகர்கோவில்
மத்தியில் ஆளும் தொழிலாளர் விரோத மோடி அரசு வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தக்கூடாது, அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் தேவையான உணவு பொருட்கள் மற்றும் ரூபாய் 5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும், நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக நிலுவைத்தொகைகளை வழங்க வேண்டும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் வீடுகளில் பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி குமரி மாவட்டத்திலும் வீடுகளில் இருந்து கொண்டு பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரன், மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவரவர் வீடுகளில் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர்.