மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் செயல்பட்டு வரும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்குவதில் சாதிகளை குறிப்பிட்டு மாணவிகளை பிரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் நவீன தீண்டாமை பாகுபாட்டிற்கு இந்திய மாணவர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில்உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி பயிலும் நிலையில் நடப்பு கல்வியாண்டின் மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின்இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் மாணவிகளை சாதிய ரீதியில் பிரித்து பார்க்கும் நோக்கில் தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு நீல நிறத்திலான அட்டையில் மாணவியின் பெயர், வரிசை எண் மற்றும் எஸ்.சி. என சாதிப்பெயர் குறிப்பிட்டும், அதேபோன்று மஞ்சள் அட்டையில் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு பி.சி என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு இளஞ்சிவப்பிலான அட்டையில் எம்.பி.சி என்றும் எழுதி மிதிவண்டிகளின் முன்புற புத்தக கூடைகளில் ஒட்டி வைத்திருந்தனர். பள்ளி நிர்வாகத்தின் இந்த கீழ்தரமான நடவடிக்கை மாணவிகளிடையே மிகுந்த மன உளைச்சலையும், கூச்சமான உணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இச்சம்பவத்திற்கு கடும்கண்டன த்தை தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு இதுபோன்ற தீண்டாமை கொடுமைகளின் நவீன வடிவங்கள் கல்வி நிலையங்களில் அரங்கேறி வருவது தொடர் கதையாகிறது. கல்வி கற்க செல்லும் மாணவர்களிடையே நஞ்சை விதைக்கும் செயலில் ஈடுபட்ட பள்ளிநிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கையை கல்வித்துறை உடனடியாக எடுக்கவேண்டும். இல்லையெனில் போராட்டங்களை நடத்துவோம் என எச்சரித்துள்ளனர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தரம் தாழ்ந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
“சாதிகள் இல்லையடி பாப்பா”என்று பாடங்களை சொல்லித் தரும்ஆசிரியர்களே சாதி வாரியாக மாணவர்களை பிரித்து பாகுபாட்டை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனரா? கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிஒன்றில் தேசிய கீதமே பாடப்படாமல் விழா முடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பள்ளி நிர்வாகம் விமர்சனத்திற்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.மயிலாடுதுறை புதிய மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் இந்த அதிருப்திகளையெல்லாம் கவனிப்பாரா?