தரங்கம்பாடி, டிச.24- நாகை மாவட்டம், செம்பனார்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய ஒன்றியங்க ளில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், ஊராட்சி தலைவர்கள் பதவிக்கும் கூட்டணி இன்றி போட்டியிடுகிறது. பணம், பிரியாணி, மது, பரிசுப்பொருட்கள் எதையும் வாக்காளர்களுக்கு அளிக்காமல் மக்களின் நலனுக்காக ஒவ்வொரு நாளும் போராட்டங்களை நடத்தி மக்களோடு, மக்களா கவே உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் பெரும்பாலான இடங்களில் வாக்கு கேட்டு செல்லும் தோழர்களிடம் நிச்சயம் ஓட்டு உங்களுக்கு தான் என அன்பாய் கூறுவதோடு செலவுக்கு என்ன செய்வீங்க என கேட்பதோடு மனமுவந்து பண உதவியும் மக்கள் கொடுத்து வருகின்றனர். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திருவிளையாட்டம் ஊராட்சியில் 2 முறை அதிக வாக்குகளுடன் தலைவராக வெற்றி பெற்ற வரும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பின ருமான பி.சீனிவாசன், ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் மாதர் சங்க மாவட்டத் தலைவரான ஜி.வெண்ணிலா ஆகியோரிடம் மக்கள் ஒவ்வொரு இடத்திலும் தாராளமாய் உதவி செய்து வரு கின்றனர். இலுப்பூரில் போட்டியிடும் ஆசிக் ரஹ்மா னிடம் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் தங்க ளால் முடிந்த உதவியை தாமாக முன்வந்து செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் களம் காணும் சிபிஎம் வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பி னர் வார்டு எண்-11 ல் போட்டியிடும், கலைச்செல்வி பரமசிவத்துக்கும், பாதரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் சம்சுதீனுக்கு ஆதரவாக, கல்லணை, பாதரக்குடி பகுதியில் வாக்குகள் கேட்டு, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத், மாவட்டச் செயலாளர் கோ.நீலமே கம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எம்.இளங்கோ வன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், பாஸ்கரன், விவசாய சங்க ஒன்றியப் பொறுப்பா ளர் செபஸ்தியார், என்.வி.கலைக்குழு பாடகர் அரங்க ராஜன், தமுஎகச திருக்காட்டுப்பள்ளி பொறுப்பாளர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒலயக்குன்னம்
மதுக்கூர் ஒன்றியம் ஒலயக்குன்னம் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம், கால னித்தெரு, அண்ணா நகர், தெற்குத் தெரு, மேலத் தெரு உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். கிளைச் செயலாளர் எஸ். வடிவேலு, வி.தனசேகரன், கே.குமார், மாதர் சங்க நிர்வாகி பெரியம்மாள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
பூதலூர்
பூதலூர் ஒன்றியக் குழு வார்டு எண் 4 ல் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பாலாம்பாள் காந்தி, மைக்கேல்பட்டி, தோமையர் தெரு, வடக்குத் தெரு, மாதா கோவில் தெரு, குடமுருட்டி கரை, பழைய ஆற்காடு, புதிய ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதர், கிளைச் செயலாளர்கள் பழனி, அறிவுறுவன், மாதர் சங்க நிர்வாகி ஈஸ்வரி மற்றும் பல்வேறு அரங்க நிர்வாகிகள் உடன் சென்றனர்.
இன்னம்பூர் ஊராட்சி
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் இன்னம் பூர் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் துணைப் பொதுச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான சின்னை. பாண்டியன் போட்டியிடுகிறார். அதை முன்னிட்டு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், சின்னை. பாண்டியன் வெற்றி பெற ஏணி சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்னம்பூர் ஊராட்சி பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஜி. நீலமேகம், சமூக ஆர்வலர் அமிர்த கணேசன் உள்ளிட்ட பொதுமக்கள் உடனிருந்தனர்.
வலங்கைமான் ஒன்றியம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புக ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் நடைபெற்றது. வலங்கைமான் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கு (15 வார்டு)போட்டியிடும் கே.சுப்பர மணியனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.ராதா (சாராநத்தம்) எஸ்.இளங்கோவன் (பூனாயிருப்பு) ஆர்.ஜே.நடராஜன் (மாணிக்கமங்கலம்) ஆகியோருக்கு வாக்கு கேட்டு கொக்கலடி, வேடம்பூர், சாராநத்தம், அரவூர், பூனாயிருப்பு, மாணிக்கமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மக்களை நேரடியாக சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிக வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெற ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகம் அமைய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் உரையாற்றி வாக்கு கேட்டார். சி.பி.எம்.மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், ஒன்றிய செயலாளர் என்.ராதா, மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் மாவட்ட ஊராட்சி 5வது வார்டு (கறம்பக்குடி) மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வசந்தகுமாரி பொன்னுச்சாமிக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். கறம்பக்குடி ஒன்றியத்தில் 27, ஊராட்சிக ளிலும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மற்றும் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு, திமுக தேர்தல் பொறுப்பாளர் கே.கே.செல்ல பாண்டியன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.சங்கர், எம்.உடையப்பன், கவிச்சுடர் கவிதைபித்தன் மற்றும் கூட்டணி கட்சியினர், சிபிஎம் வேட்பாளர் வசந்தகுமாரி பொன்னு சாமிக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத் திற்கு வாக்கு சேகரித்தனர். நாகை மாவட்டம் பொறையார் அருகே இலுப்பூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு சிபிஎம் சார்பில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிடும் ஆசிக் ரஹ்மான் இலுப்பூர், புத்தகரம் உள்ளிட்ட உட்கிராம பகுதிகளில் வாக்கு சேகரித்தார். விதவை, முதியோர்களுக்கு மாதந்தோறும் தடை யின்றி உதவித்தொகை கிடைக்க பாடுபடுவேன் என உறுதியளித்து தீவிர வாக்கு சேகரித்தார்.
திருத்துறைப்பூண்டி
மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் அம்மனூர், கச்சனம், ஆலத்தம்பாடி, கோமல் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சிகளின் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பாலகுரு உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.