மயிலாடுதுறை:
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசையும்,அதற்கு துணை நிற்கும் ஒன்றிய மோடி அரசையும் கண்டித்து ஜூலை 17 அன்று டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழுக்கூட்டம் மாநிலத்தலைவர் வி.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநிலப் பொருளாளர் கே.பெருமாள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக தலைமையிலான மாநில அரசு பொறுப்பேற்றபின் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பாராட்டத்தக்க வகையில் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டதால் தற்போது கொரோனா தொற்று குறைந்துவருகிறது.அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கும், மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கும் அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். குறுவை சாகுபடிக்கு தொகுப்புதிட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாயத் திற்கு தனிபட்ஜெட் சமர்ப்பித்து வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும்,கடந்த ஆட்சிக்காலத்தில் விவசாய நிலங்களை பாழ்ப்படுத்தும் எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து,வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டங்களின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றிருப்பது உள்ளிட்டமாநில அரசின் நடவடிக்கைகளை விவசாயிகள்சங்கத்தின் மாநிலக்குழு வரவேற்கிறது. நீண்டகாலமாக தீர்க்கப்படாத வேளாண் பிரச்சனைகளை தீர்த்து வைக்க ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2 ஆயிரம் விவசாயிகளுடன் தில்லிக்கு...
தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசைக் கண்டிப்பதோடு வருகிற ஆகஸ்ட்முதல் வாரத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக 2 ஆயிரம் விவசாயிகளுடன் தில்லி போராட்டத்தில் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி முறைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக செயல் படும் கர்நாடக அரசை கண்டித்தும்,அதற்கு துணைநிற்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் ஜூலை -17 அன்று டெல்டா மாவட்டங்கள்முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், சமீபத்தில் ஒன்றிய அரசு அமைச்சரவை விரிவாக்கம் செய்து தனியாக கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியிருப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களையும், உரிமைகளையும் மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயையும் பறிக்கக் கூடிய வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளதாகவும்,பெரு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக வழிவகைசெய்துள்ள ஒன்றிய பிஜேபி அரசை கண்டிப்பதாகவும், நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் லஞ்சம் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு,மையங்களில் இடவசதி,சாக்கு பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு முழுமையாக பணம் வழங்கிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
பயிர்காப்பீட்டுக்கான அரசின் பங்குத்தொகையை செலுத்துக
விவசாயிகளுக்கான பயிர்காப்பீட்டுத் தொகை கடந்த காலங்களில் உரிய காலத்தில்வழங்கப்படாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறித்த விபரங் களை வங்கி நிர்வாகம் மாற்றி பதிவு செய்ததால் 2018 ஆம் ஆண்டிற்கான பயிர்காப்பீட்டுத் தொகை 500 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான மாநில அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசின் பங்கு தொகை இதுவரை காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீட்டுத்தொகை கிடைப்பதில் சிரமம் ஏற்படும். எனவேபயிர்காப்பீட்டுக்கான பங்குதொகையை உடனடியாக ஒன்றிய அரசும்,மாநில அரசும் செலுத்த வேண்டும் என்றும், விழுப்புரம் முதல்நாகப்பட்டிணம் வரையிலான நான்கு வழிச்சாலை விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப் பட்ட பட்டா மற்றும் குத்தகை சாகுபடி நன்செய், புன்செய் மற்றும் கோயில் மடம் நிலத்தில் குடியிருக்கும் வீடுகளுக்கு இன்றைய சந்தை விலைமதிப்பீட்டின்படி ஒன்றிய அரசின் வழிக்காட்டுதலின் படி உரிய இழப்பீட்டு தொகையை வழங்கப்படாமல் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெறக்கூடாது என்றும், மயிலாடுதுறை அருகேயுள்ள தலைஞாயிறு என்கேபிஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து சீர்செய்து மீண்டும் செயல்பட தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.