நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரிவாள்சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்த வாக்காள பெருமக்களுக்கு முதற்கண் நன்றி.என்னோடு தோள் நின்று உழைத்த கூட்டணியின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தேர்தல் பணிக்குழு தொகுதி செயலாளர் ப.கோவிந்தராஜ் அவர்களுக்கும், பிரச்சார பயணங்களில் தங்களைஇணைத்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி.
அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம் உள்ளிட்ட தலைவர்களுக்கும், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாநில துணைத்தலைவர்-திரைக்கலைஞர் ரோகிணி, இயக்குநர் லெனின் பாரதி, பாண்டிச்சேரி சப்தர்ஹஷ்மி கலைக்குழு ஆகியோருக்கு எனது நன்றி.
கட்சியின் வெகுஜன அரங்கங்களில் இருந்து பணியாற்றிய தோழர்களுக்கும், பிற மாவட்டங்களி லிருந்து வந்து தேர்தல் களப்பணியாற்றிய கட்சியின் முன்னணி தலைவர்களுக்கும் தோழர்களுக்கும், தேர்தல் நிகழ்வுகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த சமூக வலைதள குழுவினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி.கீழ்வேளுர் தொகுதியென்பது கிராமங்கள் நிறைந்தது. உடலுழைப்புசெலுத்தி பிழைப்பு நடத்தும் உழைப்பாளி மக்கள் நிறைந்த பகுதி.விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கணிசமாக வாழும் தொகுதி. இத்தொகுதியில் மக்களுக்கான பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் செய்து வந்திருக்கிறது. தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் விநியோகிக்கப்பட்டாலும் உழைக்கும் மக்கள் எப்போதும் நம்மோடுதான் இருப்பார்கள் என்பது கண்கூடு.
வீரம் விளைந்த வெண்மணி மண் இத்தொகுதி. வெண்மணியில் பற்றவைத்த நெருப்பு எங்கள் நெஞ்சங்களில் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறது என்ற செய்தி வாக்குகள் வழியே நாம் காண்கிறோம். சட்டமன்ற பணியாற்ற எனக்கு வாக்களித்த கீழ்வேளூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய கூட்டணி கட்சிகளுக்கும். மீண்டுமொருமுறை கட்சியின் நாகை மாவட்டக் குழுவின் சார்பிலும், என் சார்பிலும் உளப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன்.