tamilnadu

img

முஸ்லிம் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் தமிழகத்திலும் துவங்கியது கும்பல் வன்முறை கலாச்சாரம்

நாகப்பட்டினம், ஜூலை 12- மாட்டுக் கறிதின்றதால், நாகைக்கு அருகேயுள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் முகமது பைசான்(24) என்பவரை வியாழக்கிழமை மாலை, இந்து மக்கள் கட்சியினர் கும்பலாக வந்து ஆயுதங்களால் தாக்கிக் கொலை  செய்ய முயன்றுள்ளனர். இதனால் படுகாயமடைந்த முகமது பைசான் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வடமாநிலங்களில் நடைபெற்று வரும் இந்த மதவெறிக் கொடுமை, தற்போது தமிழகத்தில் நாகை மண்ணில் துவங்கியுள்ளது. நாகை ஒன்றியத்தைச் சேர்ந்த பொரவச்சேரி என்னும் ஊரில் இஸ்லாமிய மக்களும், தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகமது பைசான் என்பவர், சென்னைக்குச் சென்ற போது, அங்கே ஓரிடத்தில் மாட்டுகறியும் சூப்பும் சாப்பிட்டிருக்கிறார். அவை மிகவும் சுவையாக இருந்துள்ளன. பொரவச்சேரிக்கு வந்த முகமது பைசான், தனது முகநூலில் “மாட்டுக்  கறியும் சூப்பும் மிகச் சுவையாக இருக்கின்றன” எனப் பதிவிட்டி ருக்கிறார். இதற்கு எதிராக, இந்து மக்கள் கட்சியின் நாகை ஒன்றியச் செய லாளர் பார்த்திபன் மற்றும் தினேஷ் குமார் ஆகியோர் தங்கள் முகநூலில் “மாட்டுக் கறி தின்றால் கொலை செய்வோம்” எனப் பதிவிட்டு மிரட்டி யிருக்கின்றனர். இதற்குப் பதிலாக முகமது பைசான் முக நூலில் தன் கருத்துக்களைப் பதிவிட்டிருக்கிறார். இந்து மக்கள் கட்சியினர் தாக்குதல் இந்நிலையில் முகமது பைசான் வீட்டு முகவரியை அறிந்துகொண்டு, இந்து மக்கள் கட்சியினர் அவரைப் பின் தொடர்ந்துள்ளனர். ஜூலை-11 அன்று மாலை, முகமது  பைசான், பொரவச்சேரி மாரியம்மன் கோயிலுக்கு எதிரே நின்றிருந்த போது, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த  தினேஷ்குமார், பார்த்திபன், மோகன், அகத்தியன், கணேசன் மற்றும் சிலர், கத்திகள், உருட்டுக் கட்டைகள் போன்ற ஆயுதங்களோடு வந்து, தனி யாக இருந்த முகமது பைசானைக் கடு மையாகத் தாக்கியுள்ளனர். இதில், தினேஷ்குமாரும் பார்த்திபனும் முகமது பைசானைக் கத்தியால் குத்தி யுள்ளனர். “மாட்டுக் கறி தின்பவனுக்கு இதுதான் தண்டனை” எனக் கூறிக் கொண்டு மேலும் தாக்கும் போது, அக்கம் பக்கம் இருந்த மக்கள் ஓடி  வரவே, தாக்கியவர்கள் ஓடி விட்டனர். அதன்பின், முகமது பைசான் நாகப்பட்டினம் அரசுத் தலைமை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சார்பில் கீழ்வேளூர் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டு, வெள்ளி க்கிழமை அன்று, காவல்துறையினர் 4 பேரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிபிஎம் தலைவர்கள் நேரில் ஆறுதல்
சிபிஎம் மாவட்டச் செயலாளர் நாகைமாலி, நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு, சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பினர்கள்  எம்.சுப்பிரமணியன், பி.கே.ராஜேந்திரன், நாகை நகரச் செயலாளர் எம்.பெரிய
சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் வழக்கறி ஞர் ப.சுபாஷ் சந்திரபோஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டப் பொருளாளர் பி.ஏ.ஜி.சந்திரசேகரன், வி.வி.ராஜா, வி.ராதா, வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், ஒன்றியத் தலைவர் பி.எம்.நன்மாறன், ஜி.சிந்தன்,ஏ.கே.குமார், எம்.ஏ.செங்குட்டுவன் உள்ளிட்டோர் நாகை மருத்துவமனைக்குச் சென்று முகமது பைசானை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
காவல்துறைக்கு வேண்டுகோள்
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் நாகைமாலி ஆகியோர், ”மாட்டுக்கறி விவகாரத்தில் முகமது பைசானைத் தாக்கிக் கொலை செய்ய  முயன்றுள்ள இந்துத்வா மத வெறி யர்கள், இந்து மக்கள் கட்சியினரைச் சேர்ந்த அந்த 5 பேரையும் பிணையில் வெளிவரமுடியாத குண்டர் சட்டத்தில் கைது செய்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். வட மாநிலங்களில் நடந்து வந்த  இந்தக் கொடிய சம்பவம், தற்போது, தமிழ்நாட்டில் முதன் முதலாகத் தொடங்கியுள்ளதைக் காவல் துறை யும் தமிழக அரசும் தொடக்கத்திலேயே இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து  நடைபெறாமல் மிக விழிப்புணர்வுடன் கண்காணித்து, இந்த மத வெறி யர்களின் கொடுஞ்செயல்களை தடுத்தும் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தும், தமிழக மக்களின் மத ஒற்றுமையையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.