தரங்கம்பாடி: நாகை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் புவி வெப்பமயமாதலை தடுக்கக் கோரி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓவியக் கண்காட்சி வியாழனன்று நடைபெற்றது. கல்லூரி மாணவ எக்ஸ்னோரா மற்றும் ஈர நிலம் அமைப்பும் இணைந்து நடத்திய கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளித்தனர். கடலூர் மாவட்டம், மன்னம்பாடி ஊரை சேர்ந்தவர் தமிழரசன், ஈரநிலம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்துகிற ஓவியரான இவர் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வரைந்த ஓவியங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதன் துவக்க நிகழ்ச்சிக்கு பொறை யார் கல்லூரி முதல்வர் ஜீன்ஜார்ஜ் தலைமை வகித்தார். மாலை கல்லூரி துணை முதல்வர் ஜோயல்எட்வின்ராஜ் வரவேற்றார். தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ரா கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றினார். துணை முதல்வர்(பகல் நேர பிரிவு) ஜான்சன் ஜெயக்குமார் கருத்துரை வழங்கினார். தமிழரசன் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கண்காட்சியை நடத்தியுள்ளேன் என்றார். நிறை வாக மாணவ எக்ஸ்னோரா ஒருங்கினைப்பாளர் முனைவர் ஜோதிபாஸ் நன்றி கூறினார்.