நாகை,ஜூலை 7- கோவையிலிருந்து மயிலாடுதுறைக்கு செவ்வாய்க்கிழமை தவிர மற்ற கிழமைகளில் ஜனசதாப்தி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. தினமும் காலை 7. 10 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் இந்த விரைவு ரயில் ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியே மயிலாடுதுறை செல்லும். 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஆயிரத்து 500 பேர் வரை பயணிக்கலாம். இந்நிலையில் ஞாயிறன்று(ஜூலை 7) காலை கோவையிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் நாகப்பட்டினத்தில் சித்தர்காடு ரயில்வே கேட் அருகே ஒற்றை பாதையில் இருந்து மாற்று பாதைக்கு மாறிய போது வளைவு ஒன்றில் தடம் புரண்டது. உடனே ஓட்டுநர் சாதூர்யமாக செயல்பட்டு ரயிலை நிறுத்திய தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த ரயிலில் 700 பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர். மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு வருவதற்கு இது தான் முக்கிய ரயில் பாதை என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாடுதுறைக்கு வரும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.