தரங்கம்பாடி, செப். 22- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூர் அடுத்துள்ள சிங்கானோடை கிராமத்தில் முன்விரோதம் காரணமாக காவல்துறையினர் முன்பாக வே பெட்ரோல் ஊற்றி வீடுகளை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கானோடை கிராமம் பாரதியார் நகரை சேர்ந்தவர் தேவிகா (50) கணவரை இழந்த இவரின் மகனிடம் வெள்ளியன்று இரவு அதே பகுதியை சேர்ந்த பஞ்சநாதன் மகன் பாலு, பாலு மகன் பிரசாத், சேகர் மகன் ஆனந்தராஜ், பஞ்சாயத்து மகன் குஞ்சு ஆகியோர் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக தகராறு செய்து தாக்கியதோடு தேவிகாவின் குடிசை வீட்டிற்கு தீ வைத்துள்ளனர். அருகில் உள்ளவர்கள் முழுமையாக தீ பரவுவதற்கு முன்பாகவே தீயை அணைத்து விட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் காவலர்கள் ஏராளமானோர் அந்த பகுதியில் இருக்கும்போதே அதே நபர்கள் தேவிகாவின் உறவினரான சீனிவாசன் என்பவரது வீட்டிற்குள் நுழைந்து 8 பவுன் நகை,20 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி விட்டு குடிசையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். ஆதார் கார்டுகள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என 5 லட்சம் மதிப்பிலானவை தீயில் எரிந்து சாம்பலானது. பொறையார் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. காவல்துறையினர் முன்பாகவே வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், ரவிச்சந்திரன், கிளை செயலாளர்கள் செல்வம், ஜீவானந்தம், பரமசிவம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டத்தலைவர் இளையராஜா ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.அதோடு, உடனடியாக காவல்துறையினர் உரிய வழக்கை பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென்றும் ,மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வீடு இழந்த சீனிவாசன் குடும்பத்திற்கு நிவாரணம் அளித்து வீடு கட்டி தர வேண்டுமென வலியுறுத்தினர்.