districts

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ராணிப்பேட்டை, ஜூன் 8- ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டம்ளர், கப் உள்ளிடட் பொருட்களை ஆட்சியர் நேரடியாக சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார். இந்நிலையில் சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட கொண்டப்பாளையம் திருமண மண்டபம் எதிரில் கொட்டப் பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளுக்கும், மின்சார அலுவலகம் அருகே ஆஞ்ச நேயர் காலனி பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைக்கும் மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அதே போல், புலிவலம் கிராமத்திலும் சாலை ஓரமாக இருந்த குப்பைத் தொட்டியில் குப்பைகளை போடாமல் அருகே பிளாஸ்டிக் பொருட்களை போட்டு தீ வைத்து மர்ம நபர்கள் எரித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். எனவே குப்பைகளை தீ வைத்து எரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.