மும்பை:
பாஜக மூத்தத் தலைவர் நாராயண் ரானே, திங்களன்று மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியைச் சந்தித் தார். பின்னர் ஆளுநர் உடனான சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தியாளர்களுக்கும் பேட்டி அளித்தார்.
அப்போது, நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருவதாகவும், ஆளும் சிவசேனா கூட்டணி அரசால், கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், அந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்
என்று ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாக வும் நாராயண் ரானே தெரிவித்தார்.இந்நிலையிலேயே, மகாராஷ்டிராவை விட குஜராத்தில்தான் கொரோனாபாதிப்பும், அதனை கையாளும் விதமும் மோசமாக உள்ளதென்றும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதானால், குஜராத்தில்தான் முதலில் அமல்படுத்த வேண்டும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார்.சிவசேனாவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத் பவாரும் ஆளுநரைச் சந்தித்து இருக் கிறாரே என்ற கேள்விக்கு, பிரதமர் மோடியே கூட சரத் பவாரிடம் ஆலோசனை கேட்பவர்தான் என்று பதிலளித்துள்ளார்.
“மகாராஷ்டிர அரசைக் கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமுயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதற்கான வழி, அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு மிகவும் வலுவாக உள்ளது.இந்த அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும்” என்றும் ராவத் தெரிவித்துள்ளார்.