மும்பை:
இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனியாருக்கு விற்கத் துடிக்கும் நிலையில், அதற்கு எதிராக #Bechendra Modi என்ற புதிய முழக்கத்தை காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி உருவாக்கியுள்ளார்.
நேர்மையற்றவர் என்று பொருள்படும் “#BechendraModi” என்ற இந்த முழக்கத்தை, டுவிட்டரிலும் ஹாஷ்-டேக்காக அவர் பதிவிட்டுள்ளார். ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, மோடிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.“அதானி, அம்பானியின் ஒலி பெருக்கியாக மோடி செயல்படுகிறார்” என்றும், “ஒரு பிக் பாக்கெட் திருடன், எப்படி திருடுவதற்கு முன்னால் கவனத்தைத் திசைத் திருப்புவானோ, அதைப் போல, பிரதமர் மோடியும், மக்களின் கவனத்தைத் திசைத் திருப்பி, நாட்டின் சொத்துக்களை தொழிலதிபர்களுக்கு கைமாற்றி விடுகிறார்” என்றும் ஏற்கெனவே, ராகுல் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ‘நேர்மையற்ற மோடி’ என்று டுவிட்டரில் ஹாஷ்-டேக்கை வெளியிட்டுள்ள ராகுல், “நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை, மோடி அவரது சூட், பூட் நண்பர்களுக்கு விற்கப் பார்க்கிறார்; அந்நிறுவனங்களை உருவாக்க பல்லாண்டு காலம் ஆயின; மோடி அரசின் இந்த நடவடிக்கையால் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள் பதற்றத்தில் உள்ளனர். நான் இந்தக் கொள்ளைக்கு எதிராக அந்த ஊழியர்களோடு தோளோடு தோள் நிற்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.