மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டு பணிகளை நிறுத்த வலியுறுத்தி நடந்து வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பேரணியை தடுக்க மும்பை காவல்துறையினர் முயன்றனர்.
இந்திய மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை மகாராஷ்டிர மாநிலத்தில் அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்பை பேரணிக்காக நடைபயணமாக வந்த ஊழியர்கள் தங்கியிருந்த நவிமும்பை பேலாப்பூரில் உள்ள பிடிஆர் நூலக கட்டடத்தை திங்களன்று காலை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அவர்களை கைது செய்து சுமார் 9 மணி நேரம் தடுத்து நிறுத்தினர்.
காவல்துறை தலைமையக வளாகத்தில் கைது செய்து வைக்கப்பட்ட இளைஞர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் வெளியிலிருந்து பேரணிக்கு எழுந்த பொதுமக்கள் ஆதரவு காரணமாக செவ்வாயன்று மாலை நடைபெறும் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், திங்களன்று இரவு வாலிபர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த சன்படாவில் உள்ள தத்தா மந்திர் உரிமையாளர்கள் காவல்துறையினரின் மிரட்டலைத் தொடர்ந்து அந்த இடத்தை வழங்க மறுத்துவிட்டனர். அதைத் தொடர்ந்தே பிடிஆர் நினைவு நூலக அரங்கிலும், அதன் மொட்டை மாடியிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கினர். செவ்வாயன்று காலை இந்த கட்டடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தவிருக்கும் அமைதியான பேரணியை காவல்துறையை பயன்படுத்தி ஒடுக்க மகாராஷ்டிர மாநில சிவசேனை- காங்கிரஸ்- என்சிபி கூட்டணி அரசு முயற்சிக்கிறது. இது உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு இந்த நாட்டுக்கு அளிக்கும் செய்தியைப் போன்றதாகும் என மகாராஷ்டிர மாநில டிஒய்எப்ஐ செயலாளர் பிரீத்தி சேகர் கூறினார்.
ஜனநாயக போராட்டங்களை அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்கி என்ஆர்சியின் முந்திய வடிவமான என்பிஆர்-ஐ அமல்படுத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சிக்கிறது. அதற்கு என்சிபியும் காங்கிரசும் துணை போவதாகவும் பிரீத்தி சேகர் கூறினார். நடைபயணம் துவக்கப்பட்ட முதல் நாளிலும் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ் உள்ளிட்ட தலைவர்களை சங்கத்தின் காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.