மும்பை:
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள தலசாரி ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் கடந்த 58 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெற்றிபெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதனை படைத்துள்ளது.ஜனவரி 7 ஆம் தேதியன்று இங்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 12 ஒன்றியக் கவுன்சில் வார்டுகளில், 10 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்றியத் தலைவர் பதவியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே கைப்பற்றியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் வேட்பாளர் வினோத் நிகோலே வெற்றி பெற்றார். அந்த சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதுதான் இந்த தலசாரி ஒன்றியமாகும்.2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பால்கர் மாவட்டத்தில் ஐந்து மாவட்டக் கவுன்சில் வார்டுகளிலும், 10 ஒன்றியக் கவுன்சில் வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, 2020 தேர்தலில் 6 மாவட்டக் கவுன்சில் வார்டுகளிலும், 12 ஒன்றியக் கவுன்சில் வார்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.தலசாரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மட்டும் நான்கு மாவட்டக் கவுன்சில் வார்டுகளிலும், 10 ஒன்றியக் கவுன்சில் வார்டுகளிலும் கட்சி வெற்றி பெற்றுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தில் முதன்முறையாக 1962-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போதிருந்து தற்போது வரையில் தொடர்ந்து தலசாரி ஊராட்சி ஒன்றியக் கவுன்சில் மார்க்சிஸ்ட் கட்சியின் வசமே இருந்து வருகிறது.