மும்பை:
மகாராஷ்டிராவில் சத்தாரா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தவர் உதயன்ராஜே போஸ்லே. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வம்சாவளி ஆவார்.ஆரம்பத்தில் பாஜக-வில் இருந்த உதயன்ராஜே போஸ்லே, பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். அந்த கட்சியின் சார்பிலேயே கடந்த 2009-ஆம் ஆண்டு முதல்தொடர்ந்து சத்தாரா தொகுதியின் எம்.பி.யாக இருந்து வந்தார்.ஆனால், கடந்த மாதம், திடீரென தேசியவாத காங்கிரசில் இருந்துவிலகிய உதயன்ராஜே போஸ்லே, மீண்டும் பாஜக-விற்கே சென்றார். முன்னதாக தனது எம்.பி பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.சரத்பவாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த உதயன்ராஜே போஸ்லே, கட்சியில் இருந்து விலகியது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.கடந்த 21-ஆம் தேதி சட்டப் பேரவை பொதுத்தேர்தலோடு, சத்தாரா மக்களவைத் தொகு திக்கும் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, உதயன்ராஜே போஸ்லே-வையே பாஜக வேட்பாளராக நிறுத்தியது.
அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீனிவாஸ் பாட்டீல் போட்டியிட்டார். தனக்கு துரோகம் செய்த போஸ்லே-வைத் தோற்கடிப்பதற்கு சரத் பவார் இத்தொகுதியில் தீவிர கவனம் செலுத்தினார். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதே சத்தாரா தொகுதியில், மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாரிசான உதயன்ராஜே போஸ்லே தற்போது 87 ஆயிரத்து 717 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ரீனிவாஸ் பாட்டீலிடம் படுதோல்வி அடைந்துள்ளார்.பாஜக-வுக்கே எதிர்காலம் என்று கருதி, அக்கட்சிக்கு ஓடிய உதயன் ராஜே போஸ்லே, தற்போது இருந்தபதவியையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.