tamilnadu

img

‘பாரத் பெட்ரோலியம்’, ‘கான்கர்’ ‘ஏர் இந்தியா’ விற்பனைக்கு...

புதுதில்லி:
நடப்பு 2019 - 20 நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியை திரட்ட வேண்டுமென்று, மத்திய பாஜக அரசு பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதற்கான பணிகளை தற்போது தீவிரப்படுத்திஇருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விற்பனைக்கான பட்டியலில், ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன்’, ‘கன்டெய்னர் கார்ப் ஆப்இந்தியா லிமிடெட்’, ‘ஏர் இந்தியா’ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களே தற்போது முன்னணியில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாகவும், சில்லரை விற்பனை நிறுவனமாகவும் இருப்பது, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் ஆகும். இந்த நிறுவனத்தில், மத்திய அரசுக்கு  53.3 சதவிகித பங்குகள் இருக்கும் நிலையில், அவற்றில் பெரும்பாலான பங்குகளை உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தளவாடங்கள் நிறுவனமான ‘கன்டெய்னர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட்’டும், பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ‘ஏர் இந்தியா’வும் விற்பனைக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.எப்படியும், இந்த மூன்று நிறுவனங்களின் பங்குகளும் 2019 - 2020 மார்ச் மாதத்திற்குள் பெருமளவில் உள்நாட்டு - வெளிநாட்டு தனியார் முதலாளிகளுக்கு விற்கப்பட்டு விடும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.