tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

அரசு அலுவலகங்களில் முகவரி, பெயர்ப்பலகை வைக்க சிபிஎம் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மேல்முறையீடு முகவரி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை முகவரி அலைபேசி எண்களுடன் பெயர்ப் பலகை இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் தொடர்பு எண்கள் அணைக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டத்தில் தகவல் கேட்டால், அரசு பணியில் பணியாற்றும் அலுவலர்களின் சொத்து விவரங்கள் கடமைகளை வெளிப்படையாக வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் பல தீர்ப்புகள் வந்த நிலையில் தகவல் கேட்டால், முன்னுக்கு பின்னான அலட்சியமான பதில்கள் தருகின்றன.  நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் உதாசீனப்படுத்தும் அலுவலர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை வருவாய்த்துறை, பதிவுத்துறை காவல்த்துறை, இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையில் தற்பொழுது பணியாற்றும் அலுவலர்களின் தொடர்பு எண்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம், மேல்முறையீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். அரசு அலுவலர்களின் சொத்து விவரங்கள் கடமைகளை கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐவி.நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

போக்குவரத்து பணியாளர்களின் வாரிசுகளுக்கு
அரசுப் பொதுத்தேர்வு சிறப்பு வகுப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலத்தில், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.


இந்தப் பயிற்சியை மண்டலப் பொது மேலாளர் கே.முகமது நாசர் தொடங்கி வைத்து வாழ்த்தினார். புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் சசிதர் கலந்து கொண்டு, பொதுத்தேர்வு எழுதுவதன் நுட்பங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. 


இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் த.சுரேஷ், பார்த்தீபன் டிக்ரோஸ், பாலமுருகன், தொழிலாளர் நலன் உதவிப் பொது மேலாளர் செல்வகணபதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.