ஏற்காடு கோடை விழா
2 லட்சம் மலர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரம்
தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றாக உள்ளது ஏற்காடு. இங்கு வருடாவருடம் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா மற்றும் தோட்டக்கலைத் துறையின் சார்பாக ஏற்காடு அண்ணா பூங்கா வில் மலர் கண்காட்சி மிகவும் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இந்த மலர் கண்காட்சியின்போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து மலர் கண்காட்சியைக் கண்டு ரசித்துச் செல்வார்கள். அதேபோல் இந்த ஆண்டும் ஏற்காடு தோட்டக் கலைத் துறையினர் மலர் கண்காட்சி நடத்துவதற்காக முதல் கட்ட பணி கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்காட்டில் துவங்கியது. இங்கு தோட்டக்கலைத் துறையின் வசம் உள்ள அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஸ் கார்டன் போன்ற இடங்களில் 40 வகை மலர்களை கொண்ட 2 லட்சம் மலர்ச் செடிகளின் விதைகளை நடும் பணியைத் தொடங்கியுள்ளனர். இதில் பால்சம், ஜினியா, சால்வியா, கிரை சாந்தியம், ஜெரேனியம், பேன்சி, பெட்டுனியா, மேரிகோல்ட், ஆஸ்டர், கைலார்டியா போன்ற செடிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப் படும் டேலியா செடிகள் சுமார் 4,000 செடிகள் தொட்டி மற்றும் மலர் படுகை களில் நடவு செய்யும் பனியையும் தொடங்கிச் செய்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து நடவு செய்யப்பட்ட விதைகள் செடிகளாக வளர்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பூக்கத் தொடங்கும் வகையில் அனைத்து செடிகளையும் தயார்ப்படுத்தும் பணியில் தோட்டக்கலைத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.