tamilnadu

வெல்லுக வேலைநிறுத்தம்!

வெல்லுக வேலைநிறுத்தம்!

குமுறு கின்ற எரிம லை நம் நெஞ்சில் வந்து குந்திட, குமரி இமயம் இரண்டும் நமது கொக்க ரிப்பால் அதிர்ந்திட, திமிறி எழுந்து திரண்டு வருது பாட்டாளிகள் பெரும்படை! அலறிப் பதறி நடுங்குதுபார் முதலாளியக் கொடும்பகை!  புதுடில்லியா வாஷிங்டனா இந்தியாவின் தலைநகர்? போடும் அவன் தாளத் துக்கிவன் ஆடுகிறான் பார் சதிர்! ஆண்டை நம்ம அதானிக்கு குலை குலையாய் நெற்கதிர்! அடித்துத் தூத்திக் கொடுத்த பின்பு நமக்குத் தரான் வெறும் பதர்!  பன்னாட்டான் பாதத் துக்கு வெண்ணை தடவும் கூட்டமே! பாட்டாளியை உயிரோ டெரித்து  எண்ணை சொரிய நாட்டமே! தொழிலாளர் சட்டத் தொகுப்பு என்று கத்தி தீட்டுமே! துரைகளை நாம் ஆட்சி விட்டு எடுக்க வைக்கணும் ஓட்டமே!  நிரந்தரமா முதலாளி கொழுத்த லாபம் எடுக்கிறான்! நிரந்தரமா தற்காலிகம் ஆகும்  சாபம் நமக்கு(த்)தான்! அவனும் அப்படி நிரந்தரம்; அட நாமும் இப்படி “நிரந்தரம்!” ஆஹா இப்படி கவருமெண்டு “சமதரும!” வரம்தரும்!  நாலு வருணத் திட்டம் போல நாலு தொகுப்புச் சட்டமே! நாலு பேரு தூக்கும் பாடை கூட இந்தத் திட்டமே! காலு இல்லா ஒருவனுக்கு நடராசா பேரடா! கருமாந்திர சட்டம் இது மூளி மொக்கைத் தேரடா!  ஆலை நிறுத்தும் வேலை நிறுத்தம் பாட்டாளிக்கு உயிரடா! அதை நிறுத்தச் சொல்லி நமக்கு தரான் தூக்குக் கயிறடா! மூலை யில்முடக் கிடணும்; இந்தச் சட்டம் பாம்புப் படமடா! மோடி ராஜா தர்பாருக்கு முடிவு கட்டணும் எழுங்கடா!  சங்கம் நமக்குத் தங்கம் அல்ல! அங்கம் !ஆம் நம் தேகமே! சங்கத் துக்கு சேதம் என்பது அங்கத் துக்கு சேதமே! சுங்கம் கெட்ட அரசு நமது சங்க உரிமை முடக்குமே! தொழிற்சங் கத்தின் செயலை வலிவை துண்டு செய்து குறுக்குமே!  முன்னூறு பேருக்குக் கீழ் இருக்கிற தொழிற் சாலையை மூடலாமாம்!குறைக்கலாமாம்! துரத்தலாமாம் ஆட்களை! கண்நூறு கொண்டழுதும்  கஷ்டம் இது குறையுமா? கனல் ஊற வேண்டும் நம்  கண்களுக்குள்! குமுறிவா!  “பாம்பு தீண்டி னால் இரண்டு வாரம் பின்தான் வைத்தியம் பார்க்கணும் நீ “ என்கிறவன் டாக்டர் அல்ல !பைத்தியம்! பைத்தியமா ? இல்லை அரசு  கா ...ரியப் பைத்தியம்! பதிநாலு நாளுக் குப்பின் தான் வேலை நிறுத்தமாம்! வேலைப் பாது காப்பு இல்லை ; பென்ஷன் இல்லை தோழியே! விபத்து நேர்ந்தால் உதவிடான்! கை விரிப்பான் முத லாளியே! ஆலைச் சங்கு சாவுச் சங்காய் ஆகிப் போகும் தோழனே! ஆர்ப்பரித்து எழாவிட்டால் ஆகும் யாவும் கூளமே!  கோடி கோடி யாய் அந்நிய முதலீடுகள் கொட்டுமாம்! மாடி மீது மாடி கள்தொழி லாளிகள் இனம் கட்டுமாம்! தேடிப் போக வேண்டாம்! வேலை வாய்ப்பு கதவைத் தட்டுமாம்! கேடிப் பயல்கள் வாக்குறுதி! வானம் கைக்கு எட்டுமாம்!  சங்கம் இருக்க லாமாம்!ஆனால் பேச்சு வார்த்தை தொல்லையாம்! சப்புக் கொட்ட லாமாம் நாக்கு! பேச உரிமை இல்லையாம்! ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மட்டும் வாய் திறந்தால் போதுமாம்! ஜேப்படிக்கும் திருடருக்கு ஆப்படிப்போம் தோழாநாம்!  சங்கங்களை சல்லி சல்லி யாகப் பிளவு படுத்துறான்! சர்க்காருபார் முதலா ளிக்கு “தர்மர் “ பட்டம் கொடுக்கிறான்! வேலை வேலை செய்து கொண்டே பேச்சு வார்த்தை நடத்தவாம்! வேலை நிறுத்தம் செய்து கொண்டே பேச்சு வார்த்தை அனர்த்தமாம்!  நூறு நாட்கள் வேலைத் திட்டம் ஊர்ப்பு றத்துத் தோழிகாள்! நூறு மாடிக் கட்டி டங்கள் கட்டும் சிட்டாள் கூலிகாள்! வேறு அல்ல நீங்கள்! இந்த யுத்தத் தில் ஓர் அங்கமே! வீறு கொண்டு வருக வருக! வேலை நிறுத்தம் வெல்லுமே!  வெள்ளைச் சட்டை போட்ட உத்தி யோகத் தோழர் கூடுக! காக்கிச் சட்டைத் தொழிலா ளிக்குள் உடன்பி றப்பைத் தேடுக! வெள்ளை சட்டை போட்டா லும்நம் வேத னைகள் தீருமோ? வெள்ளை பூசி குட்டிச் சுவரை வீடாக்குதல் ஏலுமோ?  பாதை ஓரக் கடைக்காரரே! அங்கன் வாடிச் சோதரி! பயிரில் உனது உயிரைக் காணும் உழவா! இதை ஆதரி! மின்சாரம் மோட்டார் கிணத்தை  எட்டா தாம் சீ! தூத்தெறி! விலை இல்லையே விளைச்சலுக்கு; ஆட்சி இதைப் பேர்த்தெறி!  வேலை நிறுத்தம் வேலை நிறுத்தம்! பாட்டா ளிக்கு உயிரடா! வேலை நிறுத்தம் வேண்டா சங்கம் தலையைப் பிரிந்த மயிரடா! ஆண்டை மாரின் வஞ்ச நெஞ்சம் படபடவென் றடித்திட ஆலை எங்கும் சக்க ரத்தை அனுமதியோம் சுழன்றிட!  ரத்தம் சிந்திப் பெற்ற உரிமை மொத்தம் காலி ஆவதோ? அத்துக் கூலி ஆகி நாங்கள் சித்தம் நொந்து சாவதோ? சத்து சாரம் முற்றும் அற்ற சக்கை உங்கள் சட்டமே! எத்தி எறிவோம்! கத்திக் கதற மாட்டோம்! ஆளும் வர்க்கமே!