tamilnadu

திருநங்கைகள் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுக : சிபிஎம்

திருநங்கைகள் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுக : சிபிஎம்

புதுதில்லி, மார்ச் 15 - திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026-க்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு தனது வலுவான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தன்னாட்சி உரிமையை மறுக்கும் திருத்தங்கள் 2014-ஆம் ஆண்டு ‘நால்சா (NALSA) (எதிர்) இந்திய ஒன்றியம்’ வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திய, பாலின அடையாளத்தைத் தாங்களே தீர்மானிக்கும் தன்னாட்சி உரிமைக் கொள்கையை இந்தத் திருத்தங்கள் முற்றிலும் சிதைக்கின்றன. மசோதாவின் பிரிவு 2, ஒரு நபர் தனது பாலின அடையாளத்தைத் தானே உணர்ந்து கொள்வதை அங்கீகரிக்க மறுக்கிறது. அதற்குப் பதிலாக, தலைமை மருத்துவ அதிகாரி தலைமையிலான மருத்துவக் குழுவின் சான்றிதழ் அவசியம் என்ற நிபந்தனையை முன்வைக்கிறது. மேலும், பிரிவு 4-இன் படி, அடையாள ஆவணங்களை வழங்குவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் இந்தச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது திருநங்கைகளை, ஊடுருவும் தன்மையிலான அதிகாரத்துவ மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கு உள்ளாக்குகிறது. இத்தகைய நடைமுறைகள் அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள தனிமனித ரகசியம், கண்ணியம் மற்றும் தனிப்பட்ட தன்னாட்சி ஆகிய அடிப்படை உரிமைகளை நேரடியாக மீறுவதாகும். சுருக்கப்பட்ட வரையறையும் புறக்கணிப்பும் திருநங்கைகளுக்கான வரையறை மிகவும் குறுகியதாக மாற்றப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டுச் சட்டம் திருநம்பிகள், திருநங்கைகள், பாலினப் பண்புகளில் வேறுபாடு கொண்டவர்கள் (gender-queers) மற்றும் பல்வேறு பாலின அடையாளம் கொண்டவர்களை அங்கீகரித்தது. ஆனால், தற்போதைய திருத்தப்பட்ட வரையறை குறிப்பிட்ட சமூக-கலாச்சாரக் குழுக்கள் மற்றும் இடைப்பாலின (intersex) மாறுபாடுகள் கொண்டவர்களுக்கு மட்டுமே என்று அங்கீகாரத்தை மட்டுப்படுத்துகிறது. தங்கள் பாலின அடையாளத்தைத் தாங்களே உணர்ந்து கொள்பவர்களைப் பாதுகாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதை இந்த மசோதாவின் குறிக்கோள்கள் மற்றும் காரணங்கள் பற்றிய அறிக்கை வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. இந்தத் திட்டமிட்ட புறக்கணிப்பு, திருநம்பிகள், இருபாலினமற்ற நபர்கள் (non-binary) மற்றும் பாலின ஓட்டத்தில் நிலைத்தன்மையற்ற நபர்களை (gender-fluid) சட்டப் பாதுகாப்பிலிருந்து முற்றிலும் நீக்குகிறது. பிற்போக்குத்தனமான கண்ணோட்டம் இந்துத்துவ கண்ணோட்டத்தால் வழிநடத்தப்படும் பாஜக அரசு, பாலினம் மற்றும் சமூக ஒழுங்கு குறித்து ஒரு கடுமையான பிராமணியக் கருத்தாக்கத்தைத் திணிக்க நீண்டகாலமாக முயன்று வருகிறது. தனிநபர்கள் தங்களை வரையறுத்துக் கொள்ளும் உரிமையை மறுக்கும் இந்த மசோதா, ‘மனுவாத’ மனப்போக்கின் பிரதிபலிப்பாகும். திருநங்கைகள் ரத்த தானம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள பாகுபாடான தடையை நீக்க விருப்பமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதும் இத்தகைய பிற்போக்குத்தனமான சிந்தனையின் வெளிப்பாடே ஆகும். மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை இந்தத் திருத்தமானது 2019-ஆம் ஆண்டுச் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த குறைந்தபட்ச பாதுகாப்புகளையும் சிதைத்துவிட்டு, அதற்குப் பதிலாக அரசின் கண்காணிப்பு, மருத்துவக் கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்துவ பிடியை உருவாக்குகிறது. இது திருநங்கைகளின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான தாக்குதலாகும், எனவே இந்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் சட்டங்களை இயற்றும்போது, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முன் ஆலோசனை நடத்தாமல் அறிமுகப்படுத்தக் கூடாது என்று அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது.