மதுரை:
குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென்று வலியுறுத்தி அனைத்துக்கட்சிகள் சார்பில் மதுரையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.சரவணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என். நன்மாறன், மாநகர் மாவட்டச் செயலாளர்இரா. விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி. ராமகிருஷ்ணன், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ராதா, மா.கணேசன், ஜா.நரசிம்மன், அ.ரமேஷ், இரா. லெனின், அ.கோவிந்தராஜ், ஆர். சசிகலா, சிபிஐ புறநகர் மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ், எம்.நந்தாசிங், ராஜலட்சுமி, எம்.எஸ். முருகன், மதிமுக மாநகர் மாவட்டச்
செயலாளர் மு.பூமிநாதன், தொழிற் சங்க மாநில இணைப் பொதுச் செயலாளர் எம்.மகபூப்ஜான், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிஅப்துல்ரஹ்மான், மதச் சார்பற்ற ஜனதா தள பொதுச் செயலாளர் க. ஜான்மோசஸ், காங்கிரஸ் மாநகர் மாவட்டச் செயலாளர் வி.கார்த்திகேயன், செய்யது உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாவது: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த மசோதா மிகவும் கொடியது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இஸ்லாமியர்களை பிரிக்க நடக்கும் சூழ்ச்சி. குறிப்பாக இருபதுஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்தியா என்பது ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளுக்கு மட்டும் சொந்தமல்ல. பல்வேறு இனம், மொழி,கலாச்சாரம் அகியவற்றை உள்ளடக்கியுள்ள அனைவருக்கும் பொதுவானது. குடியுரிமை மசோதாவை திரும்பப்பெறும் வரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்.