அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும்!
திருப்புவனம் காவல்நிலைய சித்ரவதை - படுகொலையை கண்டித்து சிபிஎம் மாபெரும் ஆர்ப்பாட்டம்; பெ.சண்முகம் பங்கேற்பு
திருப்புவனம், ஜூலை 6 - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நடந்த காவல்நிலைய சித்ரவதை - படுகொலை சம்பவத்தைக் கண்டித்து திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் பணியாற்றி வந்த இளைஞர் அஜித்குமாரை, விசாரணை என்ற பெயரில் கடுமையாக தாக்கி, சித்ரவதை செய்து படுகொலை செய்த காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனத்தை கண்டித்தும்; இந்த கொடூரச் செயலுக்கு துணை போன அனைவரையும் வழக்கில் சேர்க்க வலியுறுத்தியும்; இதுபோன்ற கொடுஞ்செயல்கள் தொடராமல் தடுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி யும் ஜூலை 6 ஞாயிறன்று திருப்புவனம் சந்தை திடலில் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன் தலைமையேற்றார். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.அர்ஜூணன், என்.பாண்டி, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் ம.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், இரா.விஜயராஜன், எஸ்.பாலா, தா.செல்லகண்ணு, மதுரை மாநகராட்சி துணைமேயர் டி.நாகராஜன், சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள், திருப்புவனம் ஒன்றிய செயலாளர் ஏ.ஈஸ்வரன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர்.