தவறான செய்தியால் தர்ப்பூசணி பழ விற்பனை பாதிப்பு
இந்த ஆண்டு தர்ப்பூசணிப் பழ விற்பனை எதிர்பாராத வீழ்ச்சியைச் சந்தித்தது. மேலும், தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக மக்கள் மத்தியில் பரவிய செய்தி தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், தர்ப்பூசணி விவசாயிகள் எதிர்பாராத பாதிப்புக்கு ஆளாகினர். சில்லரை விற்பனையில் ஒரு கிலோ ரூ.15-க்கு விற்ற தர்ப்பூசணி பழங்கள், கிலோ ரூ.10-க்கு விற்றும் வாங்க ஆளில்லாமல் உள்ளது. இதுகுறித்து, பாபநாசம் அருகே தர்ப்பூசணி விற்பனையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு தர்ப்பூசணி விளைச்சல் அதிகம். இந்த ஆண்டு தர்ப்பூசணியில் ஊசி மூலம் சுவை கூட்டுகின்றனர் என்ற தவறான செய்தி பரவியதால், விலை வீழ்ச்சியை சந்தித்தது. விற்பனையும் சரிந்தது. இந்த வருடம் எதிர்ப் பாராத இழப்பை சந்தித்த விவசாயிகள், அடுத்த வருடம் தர்ப்பூசணி சாகுபடியில் ஈடுபடுவார்களா என்பது சந்தேகம்தான் என்று தெரிவித்தார்.
திருநள்ளாறு கோவிலில் ஏப்.25 இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூர்த்தம்
திருநள்ளாறு தர்பாண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூர்த்தம் கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு உற்சவம் குறித்து திங்கட்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன. அதன்படி, வரும் 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூர்த்தமும் மே 23 ஆம் தேதி கொடியேற்றம், ஜுன் 6 ஆம் தேதி தேரோட்டம் மற்றும் பிறநாட்களில் நடைபெறக்கூடிய நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து, உற்சவத்துக்கான பூர்வாங்கப் பணிகள் உடனடியாக தொடங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இக்கோவில் பிரம்மோற்சவத்தில் செண்பக தியாகராஜ சுவாமி உன்மத்த நடன நிகழ்வும், தேரோட்டம், சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அம்பேத்கர் பிறந்த நாள் விழா - ‘யாம் இனி’பண்பாட்டு மைய விருது விழா
பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்டு அம்பேத்கர் திடலில் ‘யாம் இனி’ பண்பாட்டு மையத்தின் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில், இந்தியாவின் முதல் திருநங்கை மனிதவள மேலாளர் டாக்டர் மதுமிதா, கோமதிநாயகம், மாணவர் வளர்ச்சி ஊக்குவிப்பாளர் தமிழ்நாடு மின்சார வாரியத்தை சேர்ந்த ஆறுமுகம், ஸ்ரீநிதி, வழக்கறிஞர் தேன்மொழி, மேடைப் பேச்சாளரான ஐந்தாம் வகுப்பு மாணவர் தளிர் மதியன் ஆகியோருக்கு 2025 இன் ‘யாம் இனி’ விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் புரட்சியாளர் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, சமூக நீதி நடனம் நடைபெற்றது. மாணவர்களின் வளர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் இளந்தளிர் எழுச்சி மன்றம் அறிமுகபடுத்தப்பட்டது.