தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களின் ஆவணங்களை சரி பார்க்கும் பணி]
மயிலாடுதுறை, ஜன.4- இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற வாக்காளர்களில், முறையாக படிவங்களை பூர்த்தி செய்யாத, ஆவணங்களை கொடுக்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தி ஆவணங்கள் பெரும் நடவடிக்கையில் அதி காரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, கால அவகாசம் கொடுத்தும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யும் வாக்காளர்களின் நோட்டீஸ் மீது, கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து 6000-க்கும் மேற்பட்டோர் முறையாக பூர்த்தி செய்யாத, உரிய ஆவணங்களை கொடுக்காத காரணத்தால், அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, சனிக்கிழமை தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் உதவி வாக்காளர் பதிவு அலுவலரும், தரங்கம்பாடி வட்டாட்சியருமான சதீஷ்குமார் தலைமையில் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர்களிடமிருந்து ஆவணங்களைப் பெற்று சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி பெறப்பட்ட ஆவணங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் தகவல்களை சரிபார்த்த பிறகு வாக்காளர் பதிவு அலுவலருக்கு அனுப்பி, அவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய உள்ளனர். இப்பணியின் போது, தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
