tamilnadu

img

தென் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு துரோகம் - சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

செயற்கை அறிவூட்ட மேம்பாட்டுக்காக 3 சீர்மிகு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டதில் ஒன்றிய அரசு தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"ஒன்றிய அரசு தென் மாநிலங்களுக்கு செய்யும் துரோகத்தின் இன்னொரு சாட்சியம் அரங்கேறியிருக்கிறது.
2023 பட்ஜெட்டில் செயற்கை அறிவூட்ட மேம்பாட்டுக்காக 3 "சீர்மிகு நிறுவனங்கள்" (Centres of Excellence) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
இதற்கான தேர்வில் கல்வியில் சிறந்தோங்கும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் நகரங்களின் உயர் கல்வி நிலையங்கள் விண்ணப்பித்து போட்டி போட்டும் கான்பூர் (உத்தரப் பிரதேசம்), ரோபார் (பஞ்சாப்), டெல்லி ஆகிய ஐ.ஐ.டி-கள் தேர்வு பெற்றுள்ளன. 
தென் மாநிலங்களில் இருந்து ஒரு உயர் கல்வி நிறுவனம் கூட தேர்வு பெறாதது ஐயங்களை உருவாக்குகிறது. 
ஒன்றிய அரசின் பிளவுவாத சிந்தனை சமூகத்தில் துவங்கி சகலத்திலும் தீவிரமடைந்து வருகிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.