கோயம்புத்தூர், அக்.7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் யு.கே.சிவஞானம் மறைவையடுத்து, அவரது இரங்கல் ஊர்வலத்தில், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பினர் திரளானோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பின ரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணைத் தலைவருமான தோழர் யு.கே.சிவஞானம் (வயது 62) திடீர் உடல் நலக் குறைவால் ஞாயிறன்று காலமானார். அன்னாரது உடல் ஞாயிறன்று மருத்துவ மனையில் இருந்து சிங்காநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. திங்களன்று காலை 8 மணி முதல் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சி ஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவல கத்தில் கட்சியினர், பொதுமக்களின் அஞ்சலிக் காக வைக்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற் குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், கே. பாலபாரதி, டி.ரவிந்திரன், செ.முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே. காமராஜ், எம்.கண்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, சிபிஎம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம், கோவை முன்னாள் எம்.பி., பி.ஆர். நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சிவசாமி மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ(எம்எல்) உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மாவட்டக்குழு அலுவலகத்தில் இருந்து, பாப்பநாயக்கன் பாளையம் மின் மயானம் வரை நடை பெற்ற இரங்கல் ஊர்வலத்தில், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய தோழர்கள் சிவப்பு, கருப்பு, நீலச் சட்டை அணிந்தவாறு திரண்டு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர். மின் மாயனத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்ம நாபன் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் இரங்கல் உரையாற்றினர். இறுதி ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும், சிஐடியு, வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம், தமுஎகச, வழக்கறிஞர், எல்ஐசி உள்ளிட்ட அரங்கங்களைச் சேர்ந்த ஏராளமானோரும் பங்கேற்றனர்.