மதுரை, ஏப்.23-மதுரை மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மதுரை மாவட்ட ஆட்சியருமான ச.நடராஜனை மாநில தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் க.கனகராஜ் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து மதுரை தொகுதியில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. வாக்குப்பதிவுக்கு பிந்தைய விதிமீறல் குறித்தும் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளிட்ட 4 அதிகாரிகள் ஆவணங்கள் உள்ள அறைக்கு சென்றிருப் பதை பொறுத்தமட்டில், அவர்கள் ஒரு கருவியாகவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு அவர்கள் சென்று வந்ததில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. மாவட்ட ஆட்சியருக்குத் தெரியாமல் இவர்கள் எப்படி சென்று வந்திருக்க முடியும்? மதுரை தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதிவாரியாக மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப் பட்டுள்ளன. இதில் மத்திய தொகுதிக்கான சாவி மட்டும் உடனடியாக மாவட்ட கருவூலத்தில் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளுக்கான சாவிகள் வெவ்வேறு தினங்களில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறையின் சாவி மட்டும் ஏப்ரல் 23ஆம் தேதி மதியம் 12.00 மணி வரை ஒப்படைக்கப்பட்டதாக தகவல் இல்லை. வாக்குப்பதிவு நாளன்றே சாவிகள் அனைத்தும் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட வேண்டுமென தேர்தல் நடத்தை விதி தெளிவாக வழிகாட்டியுள்ள நிலையில் சாவிகள் வெவ்வேறு தேதிகளில் ஒப்படைக்கப்பட்டிருப்பதும், இதுவரை ஒரு தொகுதியின் சாவி ஒப்படைக்கப்படாமல் இருப்பதும் எப்படி என்ற கேள்வி எழுகிறது.மேலும், தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கண்காணிப்புக் கேமிரா பொருத்தப்படவில்லை. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வேட் பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கேமிராவின் மானிட்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூடாகிவிட்டது என்ற காரணத்தைக் கூறி ஒரு மணி நேரம் அணைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. மதுரை தொகுதியின் விதிமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் மாநில தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளனர். மதுரை தொகுதியில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய நிலையிலும் விதிமீறல்கள் தொடர்கிறது. இந்தச் சூழலில், வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். மதுரை தொகுதி தேர்தல் அலுவலர் ச.நடராஜனை இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது வேட்பாளர் சு.வெங்கடேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.