மயிலாடுதுறை, பிப்.17- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நான்கு வழிச்சாலையால் வீடு இழந்த இஸ்லாமிய ஏழை பெண்ணுக்கு, இழப்பீடு தராமல் போராட்டங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியர் இழுத்தடிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் வீ.எம்.சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியன், விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் மாமாகுடி ஆனந்தன் ஆகியோர் தனி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை அமைக்கப்பட்டு வருகிற நான்கு வழிச்சாலையால் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு முறையாக வழங்கப்படவில்லையென தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செம்பனார்கோவில் அருகேயுள்ள தலைச்சங்காடு கிராமம் பெருமாள்கோவில் தெரு பகுதியில் வசித்த கணவரை இழந்த பாத்திமா ஜொகரான் என்ற வயதான இஸ்லாமிய பெண்ணின் வீடு நான்கு வழிச்சாலையால் அகற்றப்பட்டது. போதிய இழப்பீடு கேட்டு வயதான அந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்ததையடுத்து, பாத்திமா ஜொகரான் உள்ளிட்ட குடியிருப்புகளை இழந்த 72 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 5 ஆயிரம் லஞ்சம்? ஒவ்வொருவரும் தலா 5 ஆயிரம் ரூபாய் குறிப்பிட்ட அதிகாரிகளிடம் லஞ்சமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாத்திமா ஜொகரானோ தன்னிடம் லஞ்சம் கொடுக்க பணமில்லை என கூறியதால் இழப்பீட்டு தொகையை வழங்க மறுக்கப்பட்டு வந்தது.
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்களுக்கு பிறகு வயதான அந்த இஸ்லாமிய பெண்ணுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பின்னரும் தரங்கம்பாடி தனி வட்டாட்சியர் ராகவன் உள்ளிட்ட சில அதிகாரிகள் அப்பெண்ணுக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். இது குறித்து செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ் கூறும் போது, தலைச்சங்காடு, அப்பராசப்புத்தூர், தலையுடையவர், கோவில்பத்து உள்ளிட்ட பகுதிகளில் நான்கு வழிச்சாலை பணியால் வீடுகளை இழந்த அப்பாவி மக்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏராளமான குளறுபடிகள் நடைபெறுகிறது. வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதிலும், பட்டாக்களை வழங்குவதிலும் வருவாய்த்துறையினர் அலட்சியப்போக்கை கடைப்பிடிக்கின்றனர். வயதான பாத்திமா ஜொகரான் என்பவருக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டை வழங்குவதற்கு குறிப்பிட்ட சில அரசு அதிகாரிகள் தடையாக இருப்பது கண்டனத்திற்குரியது. மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் தனிவட்டாட்சியர் ராகவன் உள்ளிட்ட சில அதிகாரிகள் அலட்சியப்படுத்தி அலைக்கழிக்கின்றனர். மேலும், அப்பராசப்புத்தூர் கிராமத்தில் ஏராமானோருக்கு மரங்களுக்குரிய இழப்பீடு வழங்குவதிலும் அலட்சியப்படுத்துவதாகவும் கே.பி.மார்க்ஸ் கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தையடுத்து தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் இரு தரப்பையும் அழைத்து தீர்வு ஏற்படுத்துவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.