தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் பெரும் உற்சாகத்துடன் துவங்குகிறது
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை, பெரம்பலூர் மாவட்டக்குழுக்கள் சார்பில் தீக்கதிர் சந்தா தொகை முதல் தவணை மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது.
ஊடக உலகில் உண்மையின் பேரொளி யாம் தீக்கதிர் நாளேட்டின் சந்தா சேர்ப்பு இயக்கம் ஜூலை 10 அன்று பெரும் உற்சாகத்து டன் தமிழ்நாடு முழுவதும் துவங்குகிறது. தீக்கதிர் நாளிதழின் வாசகப் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்துடனும்; அரசியல், சமூக, பொருளாதார பிரச்சனைகளின் பின்னணியை உழைப்பாளி மக்களுக்கு விரிவாக எடுத்துச் செல்லும் விதத்திலும் ஜூலை 10 முதல் 20 வரை மாநிலம் முழுவதும் சந்தா சேர்ப்பு இயக்கத்தை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. கட்சி யின் மாநில, மாவட்டத் தலைவர்கள் முதல் கிளை உறுப்பினர்கள் வரை அனைத்து தோழர்களும் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் முழுவீச்சில் பங்கேற்கிறார்கள். இதன் துவக்கமாக தீக்கதிரின் அனைத்து பதிப்புகளிலும் மாவட்ட வாரியாக விரிவாக தயா ரிப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தயா ரிப்பு கூட்டங்களில் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஜூலை 5 அன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக்குழு சார்பில் முதல் கட்ட தீக்கதிர் சந்தா தொகையை மாநில செயலாளர் பெ.சண்முகத்தி டம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து வழங்கினார். பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பில் முதல்கட்ட சந்தா தொகையை மாவட்ட செயலாளர் எஸ்.ரமேஷ் வழங்கினார். ஜூலை 6 ஞாயிறன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற தயாரிப்பு கூட்டத்தில் முதல் தவணை தீக்கதிர் சந்தா தொகையை, முதன்மை பொது மேலாளர் என்.பாண்டியிடம், மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் வழங்கினார். ஞாயிறன்று திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, எரியோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற தயாரிப்புக் கூட்டங்களில் முதல் கட்ட தீக்கதிர் சந்தா தொகை வழங்கப்பட்டது. திண்டுக்கல் நகரில் சந்தா சேர்ப்பு இயக்கத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் துவக்கி வைத்தார். அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய தயாரிப்பு கூட்டங்கள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல்லில் சந்தா சேர்ப்பு இயக்கத்தை துவக்கி வைத்த ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.