திருவனந்தபுரம், செப்.10 - வெளிநாட்டு மாணவர்களை கேரளத்துக்கு ஈர்க்கும் திட்டத்தில் உயர்கல்வி கவுன்சிலுடன் இணைந்து செயல்பட உலக வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனுடன் நடைபெற்ற கூட்டத்தில் உலக வங்கி நிபுணர் குழு உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்தனர். உயர் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களால் உலக வங்கியின் பிரதிநிதிகள் ஈர்க்கப்பட்டனர். கல்வியின் தரம் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சமூக நீதி மற்றும் உயர்கல்வியை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஒத்துழைப்பை வரவேற்பதாக முதல்வர் தெரிவித்தார். குழு செப்.10 செவ்வாயன்று டிஜிட்டல் பல்கலைக்கழகம் மற்றும் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியை (சிஇடி) பார்வையிட்டது. முன்னதாக நினா அர்னால்ட் (உலகளாவிய முன்னணி, உயர்கல்வி), டென்னிஸ் நிகாலீவ் (திட்டத் தலைவர்), அம்பரீஷ் (மூத்த ஆலோசகர்), உயர்கல்வி கவுன்சில் துணைத் தலைவர் ராஜன் குருக்கள் மற்றும் சர்வதேச சிறப்பு அதிகாரி எல்டோ மேத்யூ ஆகியோர் முதல்வரை சந்தித்தனர்.