மார்க்சியத்தை ஆழ்ந்து கற்க மார்க்சின் சிலை உத்வேகமூட்டும்!
சிலை திறப்பு விழாவில் தலைவர்கள் பேச்சு
சென்னை, மே 6 – “மார்க்சியத்தை ஆழ்ந்து கற்க, மாமேதை காரல் மார்க்சின் சிலை உத்வேகம் ஊட்டுவதாக இருக்கும்” என்று தலைவர்கள் கூறினர். காரல் மார்க்சின் 207-ஆவது பிறந்த நாளான திங்களன்று (மே 5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலு வலகத்தில் அவரது உருவச்சிலை திறக்கப்பட்டது. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலை வர் ஜி. ராமகிருஷ்ணன், காரல் மார்க்ஸ் சிலை யைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தலை வர்கள் பேசியதன் சுருக்கம் வருமாறு:
கே.பாலகிருஷ்ணன்
‘மார்க்ஸ் அன்றைக்கு உலகத்தை படித்துக் கொண்டிருந்தார். இன்றைக்கு உல கம் மார்க்சை படித்துக் கொண்டிருக்கிறது’ என்று தலைவர் ஒருவர் குறிப்பிட்டதையும், ‘கடந்த 1000 ஆண்டுகளில் தலைசிறந்த தத்துவ ஞானி காரல் மார்க்ஸ்’ என்ற பிபிசி ஆய்வு முடிவையும் சுட்டிக்காட்டி கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமது உரையைத் துவக்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “மார்க்ஸ் சிறந்த கவிஞராக இருந்தார். பொருளா தாரம், தத்துவம், சமூகத்தை படித்து, சமூக அமைப்பையே மாற்றுகிற மார்க்சிய தத்துவத்தை உருவாக்கினார். தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதி நாடற்றவராக இருந்தார். இன்று உலகம் முழுக்க ஒவ் வொரு நாட்டிலும், தன்னுடைய நாட்டின் குடிமகனாக மார்க்சை மக்கள் கொண்டாடு கின்றனர்” என்று தெரிவித்தார்.
முதலாளித்துவத்தால் தீர்வைத் தர முடியாது
மேலும், “தன்னுடைய குழந்தையை அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டி வாங்கு வதற்குக் கூட பணம் இல்லாமல், தன்னு டைய கோட்டை விற்று அடக்கம் செய்தார். உழைப்பாளி மக்களின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்கிற ஒரு கலங்கரை விளக்க மான தத்துவத்தை கண்டறிந்த மாமேதை காரல் மார்க்ஸ், கடைசிவரை வறுமையில் தான் வாழ்ந்தார். தத்துவத்தை உருவாக்கி மார்க்ஸ் முதல் அதனை நிலைநிறுத்த போராடிய அத்தனை பேரும் வறுமையை எதிர்த்துப் போராடிக்கொண்டேதான் அதனை செய்தனர். உலக முதலாளித்துவ வளர்ச்சி அடைந் தாலும் அதனால் மக்களுடைய பிரச்ச னைக்கு தீர்வு காண முடியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் வர்த்தக வரி களை உயர்த்தியும், தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் திணறுகிறது. உலக ஏகாதிபத்தியத்திற்கு சவால் விடுவதாக செங்கொடி ஆட்சி செய்யும் நாடுகள் தான் உள்ளன. பசி - பட்டினிக்கு சவால் விடுவ தாக மார்க்சியத் தத்துவம் உள்ளது.
மார்க்சியத்தை ஆழ்ந்து பயில வேண்டும்
அனைத்து பிரச்சனைகளுக்கும் மார்க்சி யம் அருமருந்தாக உள்ளது. எனவே, மார்க்சிய தத்துவத்தை முழுமையாக படிக்க வேண்டும். மார்க்சின் வாழ்க்கை வர லாற்றை படிக்க வேண்டும். இந்தியா விற்கே வராமல், இந்தியாவைப் பற்றி 22 ஆழ மான கட்டுரைகளை மார்க்ஸ் எழுதி னார். மார்க்சின் சிலை, நம்மை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும். சிலையாக பார்ப்பதற்கு மாறாக, தத்துவத்தை அதிகம் பயில்கிறவர்களாக மாற வேண்டும்” என்று கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். உ. வாசுகி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது: “சுரண்டல் சமூகத்திலிருந்து, விடுதலை பெற்று வர்க்கப் பேதமற்ற, சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்கிறது மார்க்சியம். நெருக்கடி முத லாளித்துவத்தில் மட்டுமா உள்ளது, சோச லிச அமைப்பில் இல்லையா? முதலாளித்து வத்தில் நெருக்கடி என்பது உள்ளார்ந்துள் ளது. முதலாளித்துவத்தை மிகச்சிறப்பாக அல்லது மிக மோசமாக நடைமுறைப் படுத்தினாலும் நெருக்கடிகளில் இருந்து அதை பிரிக்க முடியாது.
சோசலிச சமூக அமைப்பை ஏற்படுத்துவதே லட்சியம்
ஆனால், சோசலிச சமூகத்தில் நெருக்கடி வந்ததென்றால், சோசலிச சமூகம் எதிர் கொள்கிற சவால்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டில் சோசலிச முறைமை என்பது அமல்படுத்தப்படுவதில் உள்ள குறைபாடாக இருக்கும். இதை உள்வாங்கி இந்தியாவிலும் சோசலிச அமைப்பை உருவாக்கும் போராட்டத்தை முன்னெடுக்க மார்க்சின் சிலை உத்வேக மளிக்கும். மார்க்சின் கருத்துக்களை தமிழகத்தில் கவிஞர்கள் எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர். “கந்தல் மனிதர் அவர் கையில் அதிகாரம் வர வேண்டும்” என்றார் கவிஞர் தமிழ் ஒளி. முதலாளித்துவ சமூக அமைப்பில் செல்வமும் வளங்களும் ஒருசிலர் கைகளில் குவியும் என்று கூறு வதை பட்டுக்கோட்டையார் “மாடாய் உழைத்தவன் வாழ்க்கையில் பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்” என்று கேள்வி கேட்டு “அவர் தேடிய செல்வங்கள் வேறு இடத்தில் சேருவதால் வரும் தொல்லை யடி” என்று கூறியிருப்பார். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மார்க்சியமே தீர்வு எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற பாடலில் “வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை – நீங்கி, வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை” என்றார் கவியரசர் கண்ணதாசன். இந்த வரிகளுக் கேற்ப இந்தியாவில் மாற்றம் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். ‘தத்துவ ஞானிகள் இந்த உலகை வியாக் யானம் செய்வார்கள், இங்கு தேவையோ, அதை மாற்றுவது தான்’ என்றார் மார்க்ஸ். நம்மை விட மிகச்சிறப்பாக சில கட்சிகள் இன்றுள்ள நிலையை விளக்குகிறார்கள். மாற்று என்னவென்றால் ‘எங்களுக்கு ஓட்டு போடுங்கள் எல்லா பிரச்சனைகள் தீர்ந்து விடும்’ என்கிறார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் ஒன்றுதான் இன்றுள்ள பிரச்சனையும் அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது.
வெளிச்சக்கீற்றை மார்க்ஸ் சிலை வழங்கும்
கம்யூனிஸ்டுகள் தங்களுடைய நோக்கத்தையோ கண்ணோட்டத்தையோ மறைக்க மாட்டார்கள். இன்றைக்கு இருக்கக் கூடிய இந்த சமூக அமைப்பு முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். புரட்டிப் போடப்பட வேண்டும் என்பதை பகிரங்கமாக வெளிப் படையாக சொல்லும் துணிச்சல் அவர்களு க்கு உண்டு. ‘கம்யூனிசப் புரட்சியைப் பார்த்து ஆளும் வர்க்கம் நடுநடுங்கட்டும்; உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்; நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை; அடிமைச் சங்கிலிகளைத் தவிர, நீங்கள் பெறுவதற்கு உலகமும் காத்திருக்கிறது!’ என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் அப்படிப் பட்ட ஒரு பொன்னுலகம் அமைப்பதற்கான சிந்தனையை மார்க்சின் இந்த சிலை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். நம்பிக்கை வெளிச்சக்கீற்றை வழங்கிக் கொண்டே இருக்கும். இவ்வாறு உ. வாசுகி பேசினார்.
இளம் தலைமுறைக்கு உரமூட்டுவோம்!
மார்க்ஸ் நிகழ்வுக்கு தலைமை தாங்கி கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசுகையில், “சென்னையில் மார்க்சுக்கு சிலை வைக்க வேண்டுமென்று கட்சி கோரிக்கை வைத்தது. அதனை யேற்று, ஏப்.3 அன்று அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க வரும் முன்பு சட்டமன்றத்தில் சிலை வைப்பதற்கான அறி விப்பை முதலமைச்சர் வெளியிட்டார். கன்னிமரா நூலகத்தின் முகப்பில் சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். வாழ்நாளின் பெரும்பகுதியை நூலகத்தில் கழித்த, வாழ்ந்த மார்க்சின் சிலை, சர்வதேச புகழ்பெற்ற கன்னிமாரா நூலகத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், தாமே நேரில் சென்று இடத்தை தேர்வு செய்து பணிகள் தொடங்கிவிட்டது என்றும் அறிவித்துள்ளார்” என்றார். “இந்த அறிவிப்பின் மூலம் சென்னையில் காரல் மார்க்சுக்கு சிலை இல்லை என்ற குறை தீர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், “மார்க்சிய தத்துவத்தை இளம்தலைமுறையும், தொழிலாளி வர்க்கமும் மேலும் கற்பதன் மூலம் அது மேலும் செம்மைபெறும், சுரண்டலற்ற சமூகம் அமைக்க பாடுபடுவோம்” என்றார். ஜி. ராமகிருஷ்ணன் சிலையை திறந்து வைத்து, கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் பேசுகையில், “‘உலக வரலாற்றில் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே மனிதகுல வரலாறு’ என்று மார்க்ஸ் கூறியதோடு, ‘முதலாளி வர்க்கம் வீழ்ச்சியடை வதும், தொழிலாளி வர்க்கம் வெற்றி பெறுவதும் தவிர்க்க முடியாத சமமான நிகழ்ச்சி’ என்று அறுதியிட்டுக் கூறினார். 1848-ஆம் ஆண்டு அவர் கூறியது, 1900களுக்கு பிறகு ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ‘வரும் காலங்களில் சமுதாயம் மாறும், தொழிலாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வரும்’ என்று உறுதியாக போராடும் கம்யூனிஸ்ட்டுகள், மார்க்சை நினைவு கூர்வது மேலும் உத்வேகம் அளிக்கும்” என்றார்.