tamilnadu

img

‘கத்தியுண்டு ரத்தமுண்டு யுத்தம் செய்த’ கதையின் பாடல் - எஸ்.வி.வேணுகோபாலன்

இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று விடுதலைப் போராட்ட வீராங்கனை தோழர் கே.பி.ஜானகி அம்மாவை நேரில் பார்த்தோம், சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில்! சொல்லப் போனால், ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாளே அவரை எம்.ஜி.ஆர் நகரில் பார்த்திருந்தோம்! அருமையான நாடகக் கலைஞர்களின் பங்களிப்பில், நாடகாசிரியர் பிரளயனின் சிறப்பான நெறியாள்கையில் நிகழ்த்தப்பட்ட அம்மா நாடகம், மகத்தான அந்தப் பொதுவுடைமைப் போராளியைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. அவரை அறிந்திராத எளிய மக்களும் கரைந்துருகிப் போன தருணம் அது. 1986-இல் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டுக்கு கான்பூர் சென்று இறங்குகிறோம். தங்குமிடத்தின் வாசலில் பெரும் இன்ப அதிர்ச்சி, வரவேற்புக்குழு தலைவரான கேப்டன் லட்சுமி எங்களை ‘வாங்கோ வாங்கோ’ என்று குழந்தைமைப் புன்னகை ததும்ப எங்களைத் தமிழில் வரவேற்று அரவணைத்துக் கொண்டது.  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களது இந்திய தேசிய இராணுவத்தின் தீரமிக்க வீராங்கனை. இத்தனை எளிய மனிதராக அன்பு கலக்க முடியுமா என்று மலைக்க வைத்த தருணம். சமூகத்தின் தவப் புதல்வர்கள் - தவப் புதல்வியர்தம் தியாக வரலாறுகளை ஆவணப் படுத்துதல் மிகவும் இன்றியமையாதது. ஓவியம், நாடகம் போலவே, உணர்ச்சிகர வரலாறுகளைக் கடத்தும் ஆற்றல் இசைக்கும் உண்டு. ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே...தோழா’ பாடலை எங்கே யார் எப்போது பாடினாலும் கண்ணீர் மல்க சிலிர்த்துக் கேட்பார் தோழர் என்.சங்கரய்யா என்பதைத் தோழர்கள் அறிவார்கள்.  சுதந்திர தினத்தன்று கட்சியின் மாநிலக் குழு அலுவலகக் கொடியேற்று நிகழ்வில் அவரை நேரில் காணும் பரவசம் அலாதியானது. எந்த வயதினரானாலும் அத்தனை உணர்ச்சி வயப்பட்டுச் சூழ்ந்திருப்பதைக் காண முடியும். இந்த ஆகஸ்ட் 15, தோழர் சங்கரய்யா மறைவுக்குப் பின் வந்த முதல் சுதந்திர தினம். அவரது நினைவுகளோடு கட்சியின் மாநிலக் குழு அலுவலக சுதந்திர தினக் கொண்டாட்டங்களில்  பங்கேற்கச் சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக, காம்ரேட் கேங்ஸ்டா தோழர்கள் தங்களது புத்தம் புதிய பாடல் ஒன்றை முதன்முதலாக அங்கே இசைத்தனர். ‘கத்தி உண்டு ரத்தம் உண்டு யுத்தம் செய்த கதையைக் கேளு...மானம் வந்து கோபம் கொண்டு  வென்ற வீரக் கதையைக் கேளு...’ என்று தொடங்கும் அந்தப் பாடல், உள்ளபடியே, தேச விடுதலைப் போராட்டக் களத்தில் வீரச் சமர் புரிந்த கம்யூனிஸ்ட் போராளிகளுக்கான செவ்வணக்கம்.

‘பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்...’ என்ற சர்வதேச கீதத்தின் தாள அதிர்வுகளைப் போலவே நடைபோடும் இந்தப் புதிய பாடல், இந்திய தேசத்தின் விடுதலை எவரது கருணையினாலும் கிடைத்து விடவில்லை, குருதி சிந்தி வென்றெடுத்த வீர சுதந்திரம் இது என்பதைச் சொல்லிச் செல்கிறது. பொதுவுடைமை இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களது ஒப்பற்ற பங்களிப்பை உணர்ச்சிகள் பறக்க உரத்துக் கூறுகிறது.  மாவீரன் பகத் சிங் பற்றிய சேர்ந்திசைப் பாடலில் கவிஞர் ஈரோடு தமிழன்பன், ‘கனவுக் கொடியில் கொய்ததல்ல சுதந்திரம், பல தியாகம் செய்து பறித்து வந்த மலர் இது, ஒரு தானமாகக் கிடைத்ததல்ல சுதந்திரம், உயர் மானம் கொண்டோர் மரணம் தந்த பரிசு இது’ என்று விவரித்திருப்பார்.  இளைஞர்கள் தினேஷ், காவியா கிருஷ்ணவேணி இருவரது உணர்வுபூர்வமான ஆக்கத்தில் விளைந்துள்ள ‘கத்தியுண்டு ரத்தமுண்டு’ பாடல், பிரிட்டிஷ் காலனி ஆட்சி எப்படி மக்களை பஞ்சத்திற்குத் தின்னக் கொடுத்தது, பொழுதெல்லாம் நம் செல்வத்தை எப்படி கொள்ளை கொண்டு போனது என்பதைப் பல்லவியிலேயே சொல்லி விடுகிறது. ‘வரலாறு மறக்காதே, வடு மறையாதே’ என்று குரல் எழுப்புகிறது. போராளிகள் எப்படி பதிலடி கொடுத்துக் களத்தில் இறங்கினர், பெரும் படையாகினர் என்பதையும் அழகாக விவரித்துக் கொண்டு போகிறது. நீண்ட பல்லவியை அடுத்து வரும் சரணத்தில், தூக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத் சிங், நேதாஜியோடு இணைந்து போர்க்களம் கண்ட கேப்டன் லட்சுமி, நாடகக் கலைஞராக அறியப்பட்டு வர்க்கப் போராளியாக எழுந்த கே.பி. ஜானகி அம்மா, பட்டப் படிப்பை உதறித் தள்ளி சுதந்திரப் போராட்டக் களமிறங்கிச் சிறை சென்ற என்.சங்கரய்யா, தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர், சைமன் கமிஷனை எதிர்த்து கர்ஜித்த பி.இராமமூர்த்தி, பி.டி. ரணதிவே, பி.சுந்தரய்யா, இ.எம்.எஸ், ஏ.கே.கோபாலன், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஜோதிபாசு, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஜீவானந்தம், நல்லகண்ணு...  என்று வரிசையாகப் பெயர்களை ‘நம் தோழரே, நம் தோழரே’ என அடையாளப்படுத்திச் செல்கிறது.

‘தியாகக் கதைகள் கேட்கும்போது கண்கள் இரண்டும் சிவக்கும், சொல்லி முடிக்க முடியாது வரலாறு நீளும்’ என்ற இடத்தில் தியாகிகள் எல்லோரது பெயரையும் ஒரு பாடலில் சொல்லிவிட இயலாது என்பதையும் குறியீடாக உணர்த்தி, ‘விடுதலைக்கு வாழ்வைத் தந்த தோழர்கள் அனைவருக்கும்...லால் சலாம்...லால் சலாம்’ என்று வீர வணக்கம் செலுத்தி நிறைவு பெறுகிறது பாடல்.  உணர்ச்சிகரமான பாடலை மீண்டும் கேட்கத் துடிக்கும் எண்ணத்திற்கு ஏற்ப காணொலிப் பதிவாகவே (https://youtu.be/0UBe92DXiJY) யூ டியூபில் இடுகை செய்துள்ளனர் தோழர்கள்.  காலனியாதிக்க ஆட்சியின் ஒடுக்குமுறையையும், அதற்கு எதிராக விடுதலைப் போரின் வீரர்கள் - வீராங்கனைகள் முஷ்டி உயர்த்தி இறங்குவதையும் பாடல் வரிகளை வாசித்தபடியே அந்தக் காணொலிப் பதிவில் காண முடியும்.  

ஆர்.ஜே.பிரசாத் இசையில் சித்திர சேனா, கரிசல் குயில் கிருஷ்ணசாமி, ஆர்.ஜே.பிரசாத் குரல்களில் செங்கொடியை உயர்த்திப் பிடிக்கிறது பாடல். தலைவர்களை உயிரோட்டமான ஓவியங்களாக கோ.ராமமூர்த்தி வழங்க, தொழில்நுட்பப் பணிகளை ஆனந்த் காஸ்ட்ரோவும், படத்தொகுப்பை ரவிசங்கரும் செய்து முடிக்க, காம்ரேட் கேங்ஸ்டா குழுவினர் சிறப்பாக முன்னெடுத்துள்ள முயற்சி இது.  1995 மார்ச் 27 சென்னையில் நடைபெற்ற செம்மலர் இதழின் வெள்ளிவிழா சிறப்பு நிகழ்ச்சியில் தோழர் என்.சங்கரய்யா, உணர்ச்சிகரமான தமது நிறைவுரையில், ‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே....’ பாடல் உருவான விதத்தை எப்படி விவரித்திருந்தார் என்பது செம்மலர் டிசம்பர் 2023 இதழில் வெளியாகி இருந்தது. ஒரு டெஸ்க்கை போட்டுக் கிட்டு பல நாள் மூளையைக் கொடஞ்சிக்கிட்டு எழுதப்பட்ட பாடல் அல்ல அது என்று சொல்லும் அவர், இந்தி பண்டிட் ஆன கட்சியின் அன்புத் தோழர் மணவாளனை, கப்பற்படை எழுச்சி மேலோங்கிய 1944-45 போராட்ட நேரத்தில் ஒரு நாள் அழைத்து, ‘தோழர் மணவாளன் அவர்களே, நீங்கள் இந்திய விடுதலைப் போராட்டம் பற்றி ஒரு பாடல் எழுதுங்களேன்’ என்று தான் கேட்க, சட்டென்று அங்கிருந்த ஒரு சின்ன காகிதத்தை எடுத்து அப்படியே எழுதி முடித்த பாடல் அது என்று பரவசத்தோடு குறிப்பிட்டு இருக்கிறார்.  விடுதலை வேள்வியில் வீரச் சமர் புரிந்த கம்யூனிஸ்டுகள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்யும் பேராவல் உந்தித் தள்ள, இளம் தலைமுறை தோழர்கள் வரலாற்றின் முக்கிய பங்களிப்பை இசைப் பாடலாக்கி வழங்கி உள்ளனர். ஒட்டு மொத்த போராட்டக் களத்தின் உணர்வுகளைக் கடத்தும் தாகத்தோடு அவர்கள் தொடுத்துள்ள முயற்சியைக் கொண்டாடி வரவேற்போம்.  அமீர் ஹைதர்கான், சீனிவாச ராவ், உமாநாத், பாப்பாம்மா உமாநாத், அனந்த நம்பியார்... என்று  இன்னுமின்னும் பெயர்களுண்டு. அவர்தம் அசாத்திய போராட்டங்களின் கதைகள் உண்டு. ‘சொல்லி முடிக்க முடியாது வரலாறு நீளும்’ எனும் துடிப்பில் வெடிக்கும் அந்த உணர்வுகளோடு இந்தப் பாடலைப் பரந்துபட்ட மக்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்.