ராமநாதபுரம், நவ.28- பழைய பாம்பன் ரயில்வே பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட புதிய பாலம் தரம் குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மண்டபம் மற்றும் பாம்பன் பகுதிகளை இணைக்கும் வகையில் 1914 இல் கட்டப்பட்ட தூக்குப்பாலம் பழுதடைந்ததால், அதற்கு மாற்றாக ரூ.545 கோடி மதிப்பீட்டில் 101 தூண்களுடன் புதிய தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக கப்பல் கடந்து செல்ல ஏதுவாக 27 மீட்டர் உயரத்தில் 77 மீட்டர் நீளத்தில் செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நவ.13, 14 ஆம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாலத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பாலம் கட்டுவதற்கான திட்டமிடும் பணியில் இருந்தே பெரும் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக சவுத்ரி, தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆர்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் தரத்துக்கு ஏற்ப செங்குத்தாக உயரும் 77 மீட்டர் நீள தண்டவாளம் அமைக்கப்படாததை சுட்டி க்காட்டியுள்ள சவுத்ரி, தூக்குப்பாலம் அமைப்பதற்கான வடிவமைப்பு மற்றும் தரக்கட்டு ப்பாட்டு விவரங்கள் ஆர்.டி.எஸ்.ஓவிடமே இல்லை என தெரிவித்துள்ளார். விசாரணையில் இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பொறுப்பை உதறியிருக்கிறது ஆர்.டி.எஸ்.ஓ. கட்டுமான பணிக்கான பளுவை தாங்கும் திறன் 36% குறைந்து விட்டதாக ஆணையர் கூறியுள்ளார். வழிகாட்டும் நெறிமுறை மீறல் கட்டுமானத்துக்கு முன் தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கும் நடைமுறைகளை பின்பற்றாமல், தான் வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே வாரியம் மீறியிருப்பதாக சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார். பாலம் கட்டும் இடத்திற்குச் சென்று வெல்டிங் தரத்தை தெற்கு ரயில்வேயின் கட்டுமான ஆய்வுக்குழு சோதனை செய்யவில்லை எனவும் புகார் கூறியிருக்கிறார். கடல் பாலம் கட்டுவதால் ஏற்படும் அரிப்பு சேதம் குறித்து கவனம் செலுத்தாததால் பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே தூண்களில் அரிமானம் ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ரயில்வே வாரிய கட்டுமானப் பிரிவு அதிகாரி சுட்டிக்காட்டிய பிறகும் அரிமானத்தைத் தடுக்க நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். புதிய ரயில் பாலம் தரக்குறைவாக இருப்பதைக் கண்டறிந்த பிறகும், பாலத்தில் தூக்கு இருக்கும் பகுதியில் மட்டும் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், மற்ற இடங்களில் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் ரயில்களை இயக்க நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளார் ஏ.எம். சவுத்ரி. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரே புதிய பாலம் குறித்து அடுக்கடுக்காக குறைபாடுகளை கூறியுள்ளதால் பாம்பன் பாலத்தில் ரயில் இயங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.