tamilnadu

img

சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கையை ஏற்று தோப்பூர் மருத்துவமனைக்கு சி.டி ஸ்கேன் வழங்கிய தமிழக அரசு

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று தோப்பூர் மருத்துவமனைக்கு சி.டி ஸ்கேன் வழங்கிய தமிழக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோப்பூர் மருத்துவமனைக்கு சி.டி ஸ்கேன் வழங்கப்பட்டது. எனது கோரிக்கையை ஏற்று உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி.
அரசு நெஞ்சகநோய் மருத்துவமனை தோப்பூர் மதுரை மருத்துவமனையானது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு கொரோனா முதல், 2ஆம் அலை மற்றும் தற்போது 3ஆம் அலைக்கும் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு சி.டி ஸ்கேன் வசதியானது இல்லாது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தோப்பூரில் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு தனியாக சி டி ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தருமாறு தமிழக அரசையும், தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தின் மேலாண்மை இயக்குநரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வலியுறுத்தினேன்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால் தோப்பூர் மருத்துவமனைக்கு தமிழ்நாடு மருத்துவசேவை கழகத்தினால் சி டி ஸ்கேன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அதற்குண்டான சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் சீரிய வேகத்தில் அம்மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்மூலமாக தற்போது நிலவி வரும் கொரோனா 3ஆம் அலையினை எதிர்கொள்ளவும்,கொரோனா நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கவும் பேருதவியாக இருக்கும். மேலும் கொரோனா நோயாளிகள் மட்டுமில்லாது இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காசநோயாளிகள் மற்றும் பிற உள்நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை மேற்கொள்ள உதவியாகவும் இருக்கும். இம்மருத்துமனையின் சுற்றுவட்டார பகுதியான திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள் CT Scan பரிசோதனைக்காக அரசு ராசாசி மருத்துவமனை மதுரையினை நாடிச் செல்லும் நிலை தவிர்க்கப்படுவதோடு அவர்களுக்கு ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும். 
இது தவிர இம்மருத்துவனைக்கென நுண்கதிர் மருத்துவர் பணியிடம் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பணியிடத்தினை தகுதியான நுண்கதிர் மருத்துவர் கொண்டு நிரப்பும் பட்சத்தில் இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள சி.டி ஸ்கேன் மேலும் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்பதால் இப்பணியிடத்தினை உடனடியாக நிரப்ப ஆவன செய்யுமாறு தமிழக அரசினை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.