மதுரை, மே, 16-ரயில்வே துறை பணிகளில் குறிப்பாக முக்கிய பொறுப்புகளில் தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை கோரிய வழக்கில், தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த மணவாளன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்," மதுரை கள்ளிக்குடி - திருமங்கலம் ரயில்வே பாதையில் கடந்த மே-8 ஆம் தேதி நிகழவிருந்த பெரும் விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. இந்த நிகழ்வு ரயில்வே நிர்வாகம் சில மாறுதல்களை கொணர வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக உள்ளது. பொதுவாக ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தி வழியிலேயே நடைபெறுகிறது. பெரும்பாலானவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தமிழகத்தில் பணியாற்றும் 15 முதல் 20 சதவீத ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களாகவே உள்ளனர். தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தப்படுவதால் தமிழ் மாணவர்கள் உட்பட அந்தந்த மண்டல மொழி பேசும் மாணவர்கள் ரயில்வே தேர்வுகளில் பெருமளவில் தேர்ச்சி பெறுவதில்லை. தமிழகத்தில் ரயில்வேயின் முக்கிய பொறுப்புகளில் குறிப்பாக இருப்போருக்கு பெரும்பாலும் தமிழ்மொழி தெரிவதில்லை. கள்ளிக்குடி - திருமங்கலம் ரயில் விபத்து நிகழ முக்கிய காரணம் தொலைத்தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனையே என கூறப்படுகிறது. திருச்சி மண்டலத்தில் 2145 கார்டுகள் பணியாற்றும் நிலையில் பெரும்பாலானவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. தமிழ் மொழி தெரிந்தவர்களை தமிழக ரயில்வே பணிகளில் அமர்த்த வலியுறுத்தி ரயில்வே யூனியன்கள் சார்பிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.ஆகவே, ரயில்வே துறை பணிகளில் குறிப்பாக ஸ்டேஷன் மாஸ்டர், லோகா பைலட், கார்டுகள், பாயிண்டஸ் மேன் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்களை பணியமர்த்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.இந்த வழக்கை புதனன்று விசாரித்த நீதிபதிகள் இது குறித்து, தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.