மதுரை;
பிப்ரவரி 23 அன்று ஆன்லைன் விண்ணப்பங்கள் துவங்கிய 4 மணி நேரத்தில் தமிழகத்தில் நீட் முதுநிலைப் பட்ட தேர்வு மையங்களின் போதாமையால் தமிழ்நாடு,புதுச்சேரியை சேர்ந்த தேர்வர்கள் திணறுகிறார்கள் என்றும் உடனடியாக தேர்வு மையங்களை தமிழகம், புதுச்சேரியில் அதிகரிக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும், தேசிய தேர்வுக் கழகத்திற்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார்.
தேர்வர்கள் அதிர்ச்சி
சு. வெங்கடேசன் எம்.பி.அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இரண்டு நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த நிறைய நீட் முதுநிலைப்பட்ட தேர்வர்கள் என்னை தொடர்பு கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்து வருகிறார்கள். ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான நேரம் துவங்கி 4 மணி நேரத்திற்குள்ளாக தமிழ்நாட்டு மையங்கள் நிரம்பிவிட்டதாக தெரிகிறது. ஆகவே தேர்வர்கள் தமிழ்நாட்டு மையத்தை தெரிவு செய்ய முடியவில்லை. அதற்குப் பிறகு புதுச்சேரி, கேரளா மையங்களும் நிரம்பிவிட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆகவே அந்த வாசல்களும் அடைபட்டுவிட்டன. இது தேர்வர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. அவர்கள் மனதில் பதற்றத்தையும், பாதிப்பையும் உருவாக்கியுள்ளது. கோவிட் காலமாகையால் வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்வதும், அங்கு போய் தங்குவதும் மிகக் கடினமாக இருக்கும். பெண் தேர்வர்கள், அவர்களோடு துணையாகச் செல்லும் மூத்தவர்கள்ஆகியோர் கூடுதல் சிரமங்களை எதிர் கொள்வார்கள். ஆகவே தேர்வர்களின் நியாயமான உணர்வுகளைக் கணக்கிற் கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் மையங்களை உடனடியாக ஏற்பாடு செய்ய நல்ல முடிவை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.