ஹவானா,ஜன.15- பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. இப்பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க வேண்டும். கியூபா மீது அமெரிக்கா திணித்துள்ள பொருளாதாரத் தடைகளை திரும்பப்பெற வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மற்றும் கியூப ஆதரவு அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் வெற்றியாக இந்த நடவடிக்கை கொண்டாடப்படுகின்றது.
பட்டியலில் அடைத்த டிரம்ப்
2021 இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப் கியூபாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்தார். இதற்கு கடுமையான எதிர்ப்புகளும் கண்டங்களும் வந்தன. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜோ பைடன் கியூபாவை அப்பட்டியலில் இருந்தும் நீக்கவில்லை மாறாக கியூபாவிற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தினார். இந்நிலையில் ஜனாதிபதி பதவி முடிவடைய ஒரு வாரமே உள்ள சூழலில் கியூபாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார் ஜோ பைடன். கியூபாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் ஆதிக்கம் சர்வதேச பயங்கரவாதச் செயல்களுக்குத் திரும்பத் திரும்ப ஆதரவை வழங்கும் நாடுகள் எனக்கூறி தனது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உள்ள நாடுகளையும் இடதுசாரிகள் தலைமையிலான நாடுகளையும் இந்த பட்டியலில் இணைத்து வைத்துள்ளது அமெரிக்கா. கியூபா, வட கொரியா, சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இப்பட்டியலில் உள்ளன.
இந்நாடுகளை இப்பட்டியலில் வைப்பதன் மூலம் சர்வதேச பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து அந்நாடுகளை அமெரிக்கா தனிமைப்படுத்தியது. இதனால் உருவாகும் பொருளாதார நெருக்கடிகள், அதனைப் பயன்படுத்தி உள்நாட்டு கலவரங்களை உருவாக்கி அந்நாடுகளின் ஆட்சியை கவிழ்த்து அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை நிறுவி தங்களுக்கு அடிபணிய செய்வதையே மட்டுமே அமெரிக்கா முக்கிய திட்டமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் சர்வதேச அமைப்புகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவை கியூபாவிற்கு கடன் வழங்க மறுத்தன. கியூபா பெரிய அளவில் எரிபொருள் பற்றாக்குறையில் சிக்கியது. இதனால் அந்நாட்டின் ஆற்றல் உற்பத்தியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு அந்நாட்டின் உற்பத்தி பதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நடவடிக்கை ஒருபுறம் இப்படியிருக்க மறுபுறம் தனது உளவுத்துறை மற்றும் கூட்டணி நாடுகளின் மூலம் பயங்கரவாதிகளையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் ஆதரித்து வருகிறது. சமீபத்திய நிகழ்வாக கடந்த ஆண்டு சிரியாவை கைப்பற்றிய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் பயங்கரவாதிகள் குழுவின் தலைமையிலான பயங்கரவாதிகளின் படைக்கு அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி உள்ளிட்ட நாடுகள் பல வகையில் ஆதரவு மற்றும் உதவி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கியூபாவிற்கு ஆதரவான சர்வதேசப் போராட்டங்கள்
கடந்த ஆண்டு டிசம்பர் 5 அன்று, அமெரிக்கா முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்த கூட்டமைப்புகள், தொழிற்சங்கத் தலைவர்கள், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க வேண்டும் என வலுவான போராட்டத்தை நடத்தினர். செப்டம்பர் மாதம் பிரேசில், அர்ஜெண்டினா என உலகம் முழுவதிலுமிருந்து 35 நாடுகளின் முன்னாள் பிரதமர்கள், ஜனாதிபதிகள், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு கடிதம் எழுதினார்கள். இந்நிலையில், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. எனினும் இது முழுமையான வெற்றியல்ல. அந்நாட்டின் மீது அமெரிக்க விதித்துள்ள அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும் என இடதுசாரிகளும் கியூபா ஆதரவு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.