சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்ட நிலையில், இது சங்கப் பதிவல்ல, சரித்திரப் பதிவு என குறிப்பிட்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கான சங்கத்தை அமைத்தனர். இந்த சங்கத்தை சட்டப்படி பதிவு செய்ய தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்தும் பதிவு செய்யாமல் காலங்கடத்துவதை கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி வேலை நிறுத்தப்போராட்டத்தை துவக்கினர். 37 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் முன்வைத்த போராட்ட துவக்கத்திற்கு முந்தைய நிலை தொடர்வது என்பதை நிர்வாகம் ஏற்றுக்கொண்டதும், சங்கப் பதிவு பொறுத்தவரையில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்று அரசு தரப்பில் அளித்த உறுதியின் அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்து தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். ஆனால் சாம்சங் நிர்வாகம் ஒன்றுபட்ட தொழிலாளர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கியது, பணியிடத்தில் பாகுபாடு காட்டியது, சங்கத்தை விட்டு நிர்வாகத்தின் ஒர்க்ஸ் கமிட்டியில் சேருபவருக்கு சலுகை என மிரட்டியும், பணிந்தும் மேற்கொண்ட முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்க பதிவு குறித்தான வழக்கு விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கில் கிடைத்த 6 வார காலத்திற்குள் சங்கத்தை பதிவு செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தின் காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இதை அடுத்து, இது சங்கப் பதிவல்ல, சரித்திரப் பதிவு என குறிப்பிட்டு சு.வெங்கடேசன் எம்.பி தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"நவீன உலகமய சூழலில் பன்னாட்டு நிறுவனங்களின் கைகள் சட்டங்களையும், அரசுகளையும் எவ்வளவு இறுக நெருக்குகிறது என்பதை சாம்சங் இந்திய தொழிலாளர் சங்க பதிவிற்காக நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டமே மிகச்சிறந்த உதாரணம்.
பன்னாட்டு நிறுவனங்களின் இறுக்கும் கைகளை முறிக்கும் வலிமை தொழிலாளர் வர்க்கத்திற்கு உண்டு என்பற்கும் இதுவே மிகச்சிறந்த முன்னுதாரணம். வாழ்த்துகள் தோழர்களே." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.