tamilnadu

img

துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம்... தேர்தல் வந்துவிட்டது; ஆணையர் மழுப்பல்....

மதுரை:
நீதிமன்ற உத்தரவுப்படி தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யவேண்டுமென வலியுறுத்தி மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் மூத்த தோழர் கருப்பன், மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம்,  மாவட்டப் பொதுச்செயலாளர் மா. பாலசுப்பிரமணியம், பாண்டி,  முன்னாள் மாவட்டத் தலைவர் விஜயன்உட்பட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

மாநகராட்சி ஆணையாளர் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து “தேர்தல் காலமாக உள்ளதால் தங்களிடம் நேரடியாக மனுவைப் பெற முடியாது. மனுவைப் பெட்டியில் போட்டு விட்டுச் செல்லுங்கள்  தங்களுடைய கோரிக்கை சம்பந்தப்பட்ட தலைமைச் செயலருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது; தேர்தல் முடிந்தவுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி கடைசி வாரத்தில் மதுரை ஆணையராகப் பொறுப்பேற்றுக்கொண்ட விசாகனிடம் இந்தக் கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 2021 மார்ச் 2-ஆம் தேதி வரை “துப்புரவுத் தொழிலாளர்கள் நிரந்தரம்” என்னவானது என்ற கேள்வி  எழாமல் இல்லை. தேர்தலுக்கு முன்பும் ஏதாவது காரணம் சொல்வது வாடிக்கையான ஒன்றுதான். தற்போது சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. .முன்தேதியிட்டு வெளியான நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் குறுக்கே நிற்க முடியுமா என்பதை மதுரை மாநகராட்சி ஆணையாளர் தான் விளக்க வேண்டும்.