சென்னை, மார்ச் 18 – கோவில்களில் 3 ஆண்டுகள் பணி யாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு திருக்கோயில் தொழி லாளர்கள் யூனியனின் பெரம்பூர் - மாதவரம் கிளை, வில்லிவாக்கம் - அம்பத்தூர் கிளை பொதுக்குழு கூட்டங்கள் அண்மையில் நடைபெற்றன. இந்த கூட்டங்களில், திருக்கோவில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான கால அளவை 5லிருந்து 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும், அன்னதான பணியாளர்களில், இறுதி அரசாணைப்படி பணிபுரிந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு தேர்வாணையம் வாயிலாக செயல் அலுவலர் பணி யிடத்தை நிரப்பும்போது, அதில் 25 விழுக்காடு ஏற்கனவே பணியில் உள்ள பணியாளர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாநில இணைப் பொதுச்செயலாளர் பாலசுந்தரம், சென்னை கோட்ட கவுரவத் தலைவர் வேலாயுதம், தலைவர் தனசேகர், செயலாளர் ரமேஷ், பொருளாளர் குகன், அமைப்பாளர் செந்தமிழ்செல்வி, கொள்கை பரப்பு செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்த பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டனர். பெரம்பூர் - மாதவரம் கிளை கவுரவத் தலைவராக வி. நந்தகுமார், தலைவராக தினேஷ் சுவாமிநாதன், செயலாளராக திவாகர், பொருளாளராக கண்ணன் அமைப்பாளராக விக்னேஷ், ஆகியோரும், வில்லிவாக்கம் - அம்பத்தூர் கிளை கவுரவத் தலைவராக சுந்தரமூர்த்தி, தலைவராக இரவிசங்கர், செயலாளராக விக்னேஸ்வரன், பொருளாளராக சேது மாதவன், அமைப்பாளராக படவட்டம்மன் ஏழுமலை, ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.