tamilnadu

img

மதுரையில் அதிகரிக்கும் மரணங்கள் : காரணம் என்ன? முழு ஊரடங்கு ஜூலை 14 வரை நீட்டிப்பு

மதுரை:
கொரோனா பரவல் மதுரையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மரணங்கள் தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே பதிவாகிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். பரிசோதனைகள் எண்ணிக்கையை 3 ஆயிரமாக அதிகப்படுத்த வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தி வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா தொற்றா ளர்கள் சிலரிடம் பேசியபோது, காலையில் உப்புமாவழங்குகிறார்கள். அதை சாப்பிட முடியவில்லை. மதியஉணவு 2 மணிக்கு மேல் 2.30மணிக்குள் வழங்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் பலர் பசியால் சுருண்டு படுத்துவிடுகின்றனர். இரவில் வழங்கும் உணவும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும் வழியின்றி சாப்பிட்டுக்கொள்கிறோம் என்றனர்.வேறுசிலரிடம் பேசியபோது, “கொரோனா சிறப்பு வார்டில் “பத்து விரல்கள்” எண்ணிக்கை
யிலேயே மருத்துவர்கள் உள்ளனர். “இருபது விரல்கள்” எண்ணிக்கையில் செவிலியர்கள்  உள்ளனர். இந்த எண்ணிக்கை 24 மணி நேரத்திற்கானது. செவிலியர்கள் அவ்வப்போது வந்து  செல்கின்றனர். மருத்துவர்களால் போதுமான அளவிற்கு கண்காணிக்க இயலவில்லை. ஓரிரு தினங்களுக்கு முன்பு கர்ப்பிணி ஒருவர் தனது தாயுடன் பிரசவத்திற்கு வந்துள்ளார். கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலியால் துடித்த தனது மகளின் நிலையைப் பார்த்து  அவரது தாய் ஒரு செவிலியரின்காலில் விழாத குறையாக சிகிச்சையளிக்குமாறு கெஞ்சியுள்ளார். அதற்குப் பின்னர் மனமிறங்கி மருத்துவம் பார்த்துள்ளனர். அந்த கர்ப்பிணி குழந்தை பெற்று நலமாக உள்ளார்.

24 மணி நேர கண்காணிப்பை அதிகப்படுத்தவேண்டும். நான்கு மணி நேரம் மட்டுமே மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைக் காவலர்கள் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் அவர்கள்மன உளைச்சலின்றி, சலிப்பின்றி பணியாற்ற முடியும். தமிழக அரசு குறைவான எண்ணிக்கையில் கொரோனா வார்டிற்கு ஊழியர்களை நியமித்தால் நிச்சயம் மருத்துவர்கள் மனச்சோர்வடைவார்கள்.  எட்டுமணி நேரப் பணி என்பதை மாற்றி ஆறு சுழற்சிகளில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கோரிக்கை. இந்த யதார்த்தத்தை சுகாதாரத்துறை அமைச்சர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

மதுரை மருத்துவமனை முதன்மையர் டாக்டர் சங்குமணி  வருத்தத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, “டெஸ்டை அதிகப்படுத்துங்கள் எனக் கூறிக்கொண்டே யிருக்கிறார்கள். நாங்களும் பணியாற்றிக் கொண்டுதானிருக்கிறோம். இதற்கு மேல் என்ன செய்வது” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனை முதன்மையரையோ, மருத்துவர்களையோ, செவிலியர்களையோ யாரும், எப்போதும் குறைசொல்ல மாட்டார்கள். அவர்களின்  பணி போற்றுதலுக்குரியது என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது. கொரோனா வை கட்டுப்படுத்த வைக்கப்படும் கோரிக்கை கள் அனைத்தும் தமிழக முதல்வர், சுகாதாரத்துறைசெயலாளர் கவனத்திற்கு செல்லவேண்டு மென்பதுதான். மதுரையில் கொரோனா நோயாளிகளை பாதுகாக்க, உயிரிழப்பை தடுக்க முன்வரிசையில் நிற்கவேண்டிய போர்ப்படை தளபதிகள் அவர்கள்தான்.  “போர்ப்படை தளபதிகள்” என்ற பொறுப்பை  மதுரையில் அவர்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதுதான் மதுரை மக்களின் வருத்தம்.

மதுரையில் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஞாயிறன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜூலை 4-ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது தற்போது வரை பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டு ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு வருகிறது. 1400 படுக்கைகள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளன. ஆக்சிஜன் வசதியுடன் அரசு மருத்துவமனைகளில் 450 படுகைகள் தயாராக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 800 முதல் 900 வரை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 
வடபழஞ்சி உள்ள தகவல் தொழில்நுட்ப த்தின் சிறப்பு மண்டலத்தில் மூன்று அடுக்கு கட்டிடம் உள்ளது பயன்பாட்டில் இல்லாத கட்டடம் குறித்து முதல்வருக்கு தகவல் அளிக்கப்பட்டு  தற்போது 1000 படுக்கைகள் தயார் படுத்தப்பட்டு கொரோனா  சிகிச்சை மையமாக செயல்படுத்தப்பட உள்ளது.  கடந்தமூன்று நாட்களாக மதுரையில் நோய்தொற்று பாதித்தவர்கள்  எண்ணிக்கை குறைவாக வருவது ஆறுதல் அளிக்கிறது என்றார்.

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு, பதிலளித்த அவர், “தற்போது ஆறாவது முறையாக பொது ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது தீவிர காய்ச்சல் சிகிச்சை முகாம் பலனை தருவதால் ஊரடங்கு தொடரலாம் என்று மாவட்ட நிர்வாகம் மருத்துவமனை அதிகாரிகளிடம் ஆலோசனை  நடத்தி முதல்வரிடம் விவரங்கள் கொடுத்துள்ளோம்” என்றார்.இதற்கிடையில் மாநகராட்சி எல்லைக்குஉட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரைகிழக்கு, மேற்கு பகுதிகளிலும், திருப்பரங்குன் றம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூலை 14-ஆம் தேதி  வரை நள்ளிரவு வரை முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.