தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுக்கோட்டை, பிப்.6-
தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில தகவல் ஆணையர்கள் ஆர். பிரியகுமார், வி.பி.ஆர். இளம்பரிதி, எம். நடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ. ராஜராஜன் முன்னிலையில் வகித்தார்.
சட்டத்தின் நோக்கம், அலுவலர்களின் கடமை, கோரிக்கைகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிப்பதன் அவசியம், சட்டத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது, பொதுத் தகவல் அலுவலர்களின் பொறுப்புகள், தகவலை வழங்குவதின் விதி விலக்குகள், விண்ணப்பங்களை கையாள்வது குறித்தும், அரசு செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை ஊக்குவித்து ஜனநாயக செயல்பாடுகளை வெளிப்படுத்தி, அனைத்து பொதுத்தகவல் அலுவலர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.முரளிதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.திருமால் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
