ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாரூர், பிப்.6- திருவாரூர் கிராம ஊராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் ஊரக வளர்ச்சி நேர்முக உதவியாளரை கண்டித்து, திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவர் என். வசந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.எஸ். செந்தில் கோரிக்கையை விளக்கி உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தெருநெய்பேர், உமாமகேஸ்வரபுரம், கல்யாணமகாதேவி ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வு நடத்தி, ஊரக வளர்ச்சித் துறை ஆணையரின் உத்தரவு படி பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். இதனை மீறி, திருவாரூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் ஊரக வளர்ச்சி நேர்முக உதவியாளர் தன்னிச்சையாக மேலிட உத்தரவு என ஊராட்சி செயலாளர்களை 6 மாதத்தில் வேறு இடத்திற்கு பணியிடம் மாற்றம் செய்ததை கண்டித்தும், ஊராட்சி செயலாளர்கள் 3 வருட காலம் பணி செய்த பின்னர், பணியிட மாறுதல் வழங்கவேண்டும் என்றும் பணி மாறுதலை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
