tamilnadu

img

தனியார் உணவகங்களில் உணவின் தரம் ஆய்வு

தனியார் உணவகங்களில்  உணவின் தரம் ஆய்வு

பெரம்பலூர், பிப்.6-  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில், அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில், தனியார் உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்யப்பட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இதில் சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக செய்தி  வெளியானது. இதனையடுத்து, பெரம்பலூரில் இயங்கிவரும் பிரபல சைவ மற்றும் அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் உணவின் தரம், உணவுக்கூடம், சமையல் பொருட்கள் வைப்பறை உள்ளிட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திடீர் ஆய்வு மேற்கொண்டார். சமையலுக்கு தரமான எண்ணெய் பயன்படுத்தப்படுகிறதா, பாத்திரங்கள் சுடுநீரில் முறையாக கழுவப்படுகிறதா. சமையலறை மற்றும் உணவகம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா, உணவகங்களை நம்பி வரும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் உணவுப்பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்றும், சமையலுக்கு தரமான எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் உணவக மேலாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், உணவகம் மற்றும் உணவுப்பொருட்கள் குறித்த குறைபாடுகளை உணவு பாதுகாப்புத் துறைக்கு 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்ற தகவலை அனைத்து உணவகங்களிலும் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  ஆய்வின்போது மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலர் சக்திவேல், மாவட்ட உணவு பாதுகாப்புத்திட்ட நியமன அலுவலர் மரு.சுகந்தன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.