கோயில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்றக் கூடாது!
கோயில் நிலங்களில் குடியிருப்போரை வெளியேற்றக் கூடாது என்றும் வாடகை வசூலிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது குறித்தும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து பெ.சண்முகம் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான நிலங்களை பயன்படுத்துவோர் கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருந்து வருகிறார்கள். அந்த நிலங்களில் சிறு சிறு வியாபாரம் செய்து வருகிறார்கள். அந்த மக்களுக்கு அவ்வப்போது நீதிமன்றத்தின் மூலமாகவும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாகவும் கூடுதல் வாடகை விதிப்பது அல்லது வெளியேறுவது போன்ற அச்சுறுத்தல்கள் தொடர்கிறது.
நம்பிக்கை கொடுத்த அமைச்சர்
கோவில் நிலங்களில் தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரக்கூடிய மக்களை எந்தக் காரணத்தை கொண்டும் வெளியேற்றக் கூடாது என்பதை முதலமைச்சரிடம் வற்புறுத்தினோம். இந்த சந்திப்பின்போது இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தார். அப்போது, கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களை எக்காரணம் கொண்டும் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபடாது என்று அமைச்சர் உறுதியளித்திருக்கிறார். மேலும், கோவில் நிலங்களில் குடியிருந்து வரும் மக்களிடம் முன்தேதியிட்டு வாடகை வசூலிப்பது, சதுர அடி அடிப்படையில் வாடகை வசூலிப்பது என்பதும் தாங்க முடியாத சுமையாக இருப்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இத்துடன், வாடகை நிலுவையை தவணை அடிப்படையில் பெறுவது, மாத வாடகையாக வசூலிப்பது என்ற அடிப்படையில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். எங்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். 5
00 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள மருதம் என்ற கிராமத்தில் சுமார் 750 ஏக்கரில் புதிதாக சிப்காட் அமைப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. இதில் ஏறத்தாழ 500 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு சொந்தமானது. இந்த 500 ஏக்கர் நிலம் சுமார் 500 விவசாயிகளுக்கு சொந்தமானது. இவர்கள் அனைவருமே போர்வெல் அமைத்து ஆழ்குழாய்கள் மூலம் பாசனம் செய்து விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும், தினந்தோறும் சுமார் 10 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யக்கூடிய கிராமம் இது. எனவே, அந்த நிலம் முழுவதும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டால் அந்த கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். விவசாயமும் பாதிக்கப்படும். கால்நடை வளர்ப்பு அழிந்து விடும். ஆகவே, அரசு அறிவித்திருக்கும் அந்த சிப்காட் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் வற்புறுத்தினோம். முதலமைச்சரும் பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம்.சின்னத்துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், சங்கத்தின் மாநில நிர்வாகி கே.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.