மதுரை:
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வருவாய் மாவட்டங்களில் மாவட்ட நீதிமன்றங்களை உருவாக்க வேண்டுமென தமிழக அரசையும் உயர்நீதிமன்றத்தையும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் என்.முத்துஅமுதநாதன் செவ்வாயன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகையை மாதம்தோறும் வழங்க வேண்டும். சட்ட ஆணையத்தின் தலைவரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான ஏ.ஆர்.லெட்சுமணன் அறிவித்த பரிந்துரையின்படி தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளையை உருவாக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்த்துப் போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அரசு வாபஸ் பெறவேண்டும். கொரோனா தொற்றில்உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துச் செய்ய வலியுறுத்தியும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை, விழுப்புரத்தில் பிப்.23 ஆம் தேதி ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.பேட்டியின் போது மதுரை மாவட்டத் தலைவர் ராமசாமி, செயலாளர் பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் என்.பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.