மணிப்பூரில் பாஜக அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்
சுராசந்த்பூர் மாவட்டத்தில் முழுஅடைப்பு ; வன்முறை இம்பால், பிப்- 6- மணிப்பூரில் ஓராண்டு கால குடி யரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு பிப்., 4ஆம் தேதி பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தது. பாஜகவைச் சேர்ந்த கேம்சந்த் சிங் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்று உள் ளார். இந்த அரசில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த நெம்சா கிப்ஜென் மற்றும் நாகா சமூகத்தைச் சேர்ந்த லோசி டிக்ஹோ ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றனர். போராட்டம் : வன்முறை ஆனால் புதிய அரசு பதவியேற்ற 24 மணிநேரத்திற்குள், மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் தீவிர மடைந்துள்ளன. தங்கள் ஒப்புதலின்றி பாஜக அரசில் குக்கி - சோ சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இணைந்த தற்கும், நெம்சா கிப்ஜென் துணை முதலமைச்சராக பதவியேற்றதற்கும் குக்கி-சோ கவுன்சில் உள்ளிட்ட பழங்குடியின அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சுராசந்த்பூர் மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டத்தை அறிவித்தன. வியாழ னன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கின. போராட்டத்தின் போது சாலையில் டயர்களைக் கொளுத்திப் போடப் பட்டதால், போக்குவரத்து முடங்கி யது. பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் போராட்டத்தை கலைக்க முயன்றபோது, போராட்டக்காரர் களுக்கும் - வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினரை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் துணை ராணுவப்படையை களமிறக்கி நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் வெள்ளியன்றும் சுராசந்த்பூர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங் களிலும் பதற்றமான சூழல் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. துரோகம் பாஜக அரசுக்கு எதிராக போராட்டத் தில் ஈடுபடும் அமைப்புகள்,”நெம்சா வெளியேற வேண்டும், நீதி கிடைக்க வேண்டும். தங்களுக்குத் தனி நிர்வாகம் வழங்கப்பட வேண்டும்” என முழக்க மிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக குக்கி-சோ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் தனி நிர்வாகம் கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த கோரிக்கைக்காக பலர் உயிரிழந்துள்ளனர். இந்த கோரிக்கை இன்னும் நிறைவேறாத நிலையில், குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜக அரசுடன் இணைந் துள்ளனர். இது தியாகிகளுக்குச் செய்யும் துரோகம் ஆகும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
