tamilnadu

திருச்சி மாநகராட்சி மேற்கு தொகுதியில் ரூ.322.80 கோடியில் திட்டப் பணிகள்

திருச்சி மாநகராட்சி மேற்கு தொகுதியில்  ரூ.322.80 கோடியில் திட்டப் பணிகள்

அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

திருச்சிராப்பள்ளி, மே 17 - தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை,  திருச்சி மாநகராட்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். அதன்படி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு வார்டு 62-க்குட்பட்ட பஞ்சப்பூரில் உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.236 கோடியில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். 15 ஆவது நிதிக்குழு மானியத்தில் இருந்து கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில், பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணியையும், சீனிவாசா நகர் மேற்கு பூங்கா பகுதியில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தையும், வார்டு எண் 52 இல் ராமசந்திரா நகர் நியாய விலைக் கட்டிடத்தையும் அமைச்சர் நேரு திறந்து வைத்தார். தொடர்ந்து, வார்டு எண் 54-க்குட்பட்ட ராஜா காலனி முதல் கரை ரோடு, உய்யக்கொண்டான் வாய்க்காலின் குறுக்கே ரூ.1.25 கோடியில் மோட்டார் பாலம் அமைக்கும் பணி, வார்டு எண்.53-க்குட்பட்ட அண்ணா நகர் இணைப்பு சாலை பகுதியில் உய்யக்கொண்டான் ஆற்றின் குறுக்கே நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். வார்டு எண் 51-ல் வள்ளியம்மை நகரில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம், வார்டு எண்.51 இல் பீமநகர் ஹீபர் ரோடு பகுதி, வார்டு எண்.54 இல் சின்ன மிளகுபாறை பகுதியில்  நியாய விலை கட்டிடங்கள், வார்டு எண்.54 பெரியமிளகுபாறை பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் மற்றும் வார்டு எண் 56 இல் கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி 4 வகுப்பறைகள் கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.  ஒரே நாளில் மொத்தம் ரூ.321.80 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. மேற்கண்ட நிகழ்ச்சியில் ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.